கிகுஜிரோ..









தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக்கும் கொடுமை.

நமக்கெல்லாம் துவக்கப்பள்ளி பருவத்தில் கோடை விடுமுறை விட்டால் எங்கே போவோம்... ?? உறவினர் வீட்டிற்கு அல்லது பாட்டி வீட்டிற்கு சென்று குதித்து கும்மாளமிடுவோம்.

அதேபோல் பள்ளியின் இறுதி நாளன்று துள்ளி குதித்து வீடு வந்து சேருகிறான் மாசோவ். தனக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு கால்பந்தை தூக்கி கொண்டு மைதானத்தை நோக்கி ஒடுகிறான். ஆனால் பயிற்ச்சியாளரோ விடுமுறையில் பயிற்சி கிடையாதென்றும் எங்காவது சென்று விடுமுறையை கழிக்குமாறு சொல்லி விட்டு கிளம்புகிறார். விளையாட யார் துணையுமின்றி தன்னந்தனியே நிற்கிறான் மாசோவ்.


சோகமே உருவாகி வீட்டினுள் அடைந்து கிடக்கிறான். பாட்டி வேலை முடித்து வந்ததும் எங்கே போவது என்று கேட்கிறான். பாட்டியும் உன் தந்தை இறந்து விட்டார்,தாயும் தொலை தூரத்தில் உனக்காக கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறாள், உன்னை எங்கேயும் கூட்டிப்போக யாரும் இல்லை என்கிறாள்.

மனமுடைந்து போகிறான் மாசோவ். மறு நாள் பாட்டி வேலைக்கு கிளம்பியதும் சிறிது பணத்தையும், தாயின் போட்டோக்களையும் முகவரியையும் எடுத்து கொண்டு தனியே கிளம்புகிறான்.

மாசோவ் தனது தாயை தேடிக்கண்டுபிடிக்க தயாராகிறான். வழியில் உறவினரான ஒரு தம்பதியினரை சந்திகிறான். அவர்களும் அவனிடம் இதமாக பேசி அவன் பயணத்தை அறிந்து கொண்டு அந்த பெண்மணி தனது கணவரையும் அனுப்பி வைக்கிறாள். அவர் பெயர் கிகுஜிரோ. கிகுஜிரோவோ சற்று போக்கிரி என்றும் மறை கழண்டு போனவர் என்றும் அனைவராலும் பாராட்டப்படுபவர்.

வேறும் யாரும் இல்லாத நிலையில் மாசோவும் கிகுஜிரோவின் துணையோடு எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் தாயை கண்டுபிடிக்க பயணமாகிறான். இந்த நீண்ட பயணத்தில் இருவருக்குள்ளும் இது நாள் வரை ஒளிந்துகிடந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதே இந்த ஜப்பானிய திரைப்படம்.


ஆரம்பத்திலேயே பணம் முழுவதையும் சைக்கிள் பந்தயத்தில் இழந்து விட்டு கையில் சல்லி காசில்லாமல் பயணத்தை தொடங்குகின்றனர் இருவரும்.

இந்த பயணத்தில் மகிழ்ச்சி, இன்பம், விளையாட்டு, நகைச்சுவை, சிறு சிறு ஆனந்தம், நடுநடுவே ஏமாற்றம் என ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் அதே நேரத்தில் சுவாரசியமாக கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர்.


நீண்ட பயணத்திற்கு பிறகு விலாசத்தை அடைகின்றனர். வீட்டை நோக்கி நடக்கிறார் கிகுஜிரோ. அதிர்ச்சியாக அந்த விலாசத்திலுள்ள அம்மாவிற்கு வேறோரு குடும்பம் உள்ளது. இதை எப்படி அவன் ஜீரணிக்கப்போகிறான் என்று அவர் தவிக்கும் போது மாசோ அழுது கொண்டு இருக்கிறான்.

உண்மை நிலை அறிந்தால் அவன் துடித்து போவான் என்று நினைத்து அந்த விலாசத்தில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்று சொல்லி சமாளிக்கிறார் கிகுஜிரோ. மாசோவின் அழுகை நின்றபாடில்லை. அவனை எப்படியாவது தேற்ற எண்ணி ஒரு பொம்மை மணியை கொடுத்து உங்கம்மா நீ வந்தா உன்கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்துட்டு போயிருக்காங்க.. உனக்கு கவலை வந்தால் இந்த மணியை அடித்தால் தேவதை வந்து உனக்கு உதவும் என்று சொல்லி ஒரு வழியாக அவனை தேற்றுகிறார்.

மீண்டும் ஊருக்கு செல்ல ஆயத்தமாகி நட்க்க தொடங்குகிறார்கள். வழியில் அந்த பிஞ்சு மனதின் ஏமாற்றத்தை எண்ணி மாசோவை மகிழவைக்க பல உத்திகளை கையாள்கிறார். பெரிய இலைகளை வெயிலுக்கு குடையாக சட்டையில் சொருகியபடி நடப்பதும், சோளத்தோட்டத்தில் புகுந்து சோளங்களை உண்டு பசியாறுவதும் ஊர் சுற்றி திரியும் எழுத்தாளரை சந்திப்பதும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான காட்சிகள்.

வரும் போது சந்தித்த பல வித மனிதர்களை மீண்டும் திரும்பி செல்லும் போது ஏதேச்சையாக சந்திப்பதும் அனைவரும் அவர்களுக்கு உதவுவதும் ஜப்பானின் ஒரு சாராரது வாழ்க்கை முறையை சமூகப் பார்வையுடன் பதிவு செய்துள்ளார் இயக்குநரும் கிகுஜிரோகவாக நடித்தவருமான டகேஷி கிட்டானோ.

குழந்தைகளின் தனிமை உலகத்தையும் நகர வாழ்க்கையில் அவர்கள் தொலைத்த கேளிக்கை விளையாட்டுகளையும் ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை தெளிவாக பதிய வைத்த ஒரு மிகச்சிறந்த திரைப்படம். என்னதான் நகைச்சுவையுடன் பதிய வைத்தாலும் அதுனுள் இழையோடியிருக்கும் சோகம் நம்மை கலங்க வைக்கிறது.

ஒவ்வொர் காட்சியும் குழந்தைக் கதைகளில் வருவது போல் ஒரு சிறு தலைப்புடன் தொடங்குவது புதுமையானதும் தனித்துவம் வாய்ந்ததாகும். குளோசப் ஷாட்டுகளை போன்றே லாங் ஷாட்டுகளிலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தி அசர வைக்கிறார் இயக்குநர்.

இறுதி காட்சிகளில் வசனங்கள் பேசாது இசையின் மூலமே படத்தை பேசவைப்பது அத்தனை அருமை.

ஒரு சிறுவனுக்கும் இரண்டாவது பாலக மனதில் இருக்கும் வயோதிகருக்கும் இடையேயான நட்பையும் ஆழ்ந்த அன்பையும் இதைவிட ஆழமாக சொல்ல இயலுமா..?? தெரியவில்லை..

உடனே பார்க்க டிரைலர் இங்கே

1999ல் வெளியாகி கேன்ஸ் உலக திரப்ப்பட விழாவில் தங்கப்பனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன் உலக அரங்கில் பல விருதுகளை வாரிக் குவித்த திரைப்படம். சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய அதிஉன்னத திரைப்படம்.


டிஸ்கி: சென்ற வருடம் எழுதிய பதிவின் மீள்பதிவு.

நேற்று நந்தலாலா பார்த்தேன். கிகுஜிரோ பார்க்காதவர்கள் கண்டிப்பாக “நந்தலாலா” பாருங்கள். நேரம் கிடைப்பின் பதிவிடுகிறேன்.

உலக சினிமா: The Reader












இந்த திரைப்படம் கண்டிப்பாக குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. குடும்பத்துடன் காண இயலாது.



இத்திரைப்படம் 1990களில் ஜெர்மனியில் Bernhard Schlink எழுதிய The Reader என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். ஆங்கிலத்தில் 2008 ல் வெளியானது.


Michael Berg புகழ்பெற்ற வழக்கறிஞர். குறிப்பாக போர் குற்றங்களின் பின்னணியில் உள்ள வழக்குகளில் நன்கு அனுபவம் பெற்றவர். ஆனால் அவரது இளமை பருவத்தில் ஏற்பட்ட இனம் புரியாத காதல் வாழ்க்கையை சித்தரிக்கிறது.

தனது வீட்டின் வழியே முன்னேறி செல்லும் டிராம் வண்டியை பார்த்து கொண்டிருக்கும் போது கதை பின்னோக்கி நகருகிறது.


இனி பின்னோக்கி:


15வயதான மைக்கேல் பள்ளியிலிருந்து ஒரு நாள் பாதியில் வீடு திரும்புகிறான். அவனுக்கு உடல் நலமில்லை. நடக்கவும் முடியவில்லை. தட்டு தடுமாறி வரும் போது மயக்கமாக ஒரு வீட்டின் முன் அமர்ந்து கொள்கிறான். டிராம் கண்டக்டராக வேலை முடித்து தனது வீடு தேடி வரும் ஹென்னா அவனை தேற்றுகிறாள். அவனை உபசரித்து வீடு வரை துணைக்கு வந்து விட்டு விட்டு போகிறாள். மைக்கேல் மருத்துவ சிகிச்சையில் அவனுக்கு கடுமையான ஜீரம் என்றும் மூன்று மாத கட்டாய ஒய்வு வேண்டும் என்றும் மருத்துவர் கூறி விட்டு செல்கிறார். வீடு, தனிமை, மருத்துவம் என்று மூன்று மாத இடைவெளிக்கு பிறகு மைக்கேல் தேறி பள்ளி செல்கிறான்.


தன்னை உபசரித்த ஹென்னாவை ஒரு நாள் சந்தித்து நன்றி சொல்ல வருகிறான். ஹென்னா அவனை விட வயதில் ஏறக்குறைய இரண்டு மடங்கு மூத்தவள். அவனின் நன்றி உணர்விற்கு மகிழ்ச்சியடைகிறாள். மைக்கேலும் விடை பெற்று செல்கிறாள். ஏனோ மைக்கேலுக்கு அவளை மீண்டும் காண வேண்டும் போலிருக்கிறது. ஒரிரு நாட்கள் அவளை சந்திக்கிறான். அவளும் அவன் மீது அளவற்ற அன்பு கொள்கிறாள். அன்பு அதீத காதலாகவும் மாறுகிறது. இனம் புரியாத ஈர்ப்புடன் பள்ளி முடிந்ததும் ஹென்னாவை காண ஒடோடி வருகிறான்.


இருவரும் விவரிக்க முடியாத அளவில் காமத்தில் ஈடுபடுகின்றனர். அதில் ஈடுபடும் பொதெல்லாம் அவனது படிப்பு பற்றி கேட்கிறாள் ஹென்னா. அவன் ஜெர்மனி,ஸ்பானிஷ், லத்தீன் படிப்பதாக கூறுகிறான் மைக்கேல். அதிலுள்ள இலக்கியத்தையெல்லாம படித்து காட்ட சொல்கிறாள். மைக்கேலும் ஒவ்வொரு நாளும் பல இலக்கியங்களையும், கவிதைகளையும் கதைகளையும் படித்து காட்டுகிறான். அவற்றையெல்லாம் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் சோகமும் கொள்கிறாள். ஒவ்வொரு இலக்கிய வார்த்தைகளையும் உள்வாங்கி கொள்கிறாள். சந்திப்பும், இலக்கிய படிப்பும் அதீத காமமுமாக நாட்கள் கடக்கின்றன.


ஒரு நாள் ஹென்னாவிற்கு பதவி உயர்வு கிடைத்து அவளை அலுவலக பணிக்கு மாற்றுவதாக உயரதிகாரி கூறுகிறாள். ஹென்னா திடிரென்று வீட்டை காலி செய்து விட்டு போய் விடுகிறாள். அவளை காணாத மைக்கேல் சொல்ல முடியாத வேதனையில் தவிக்கிறான். பள்ளி படிப்பு முடிந்து சட்ட கல்லூரியில் சேருகிறான். குற்றவியல் சட்டங்களில் ஆர்வம் ஏற்பட்டு அதில் மேல் படிப்பும் படிக்கிறான் மைக்கேல். பிராக்டிகல் அறிவு இருக்க வேண்டும் என்று கோர்ட் நடைமுறைகளை காண கல்லூரி பேராசிரியர் ஒரு நாள் ஏற்பாடு செய்கிறார்.


வழக்குகளை காண நீதிமன்றம் சென்ற மைக்கேல், அன்றைய வழக்கில் குற்றவாளி கூண்டில் ஹென்னா இருப்பதை கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறான். 1944ல் யூத அகதிகள் முகாமில் முன்னூறு யூத பெண்கள் சர்ச்சில் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் ஹென்னா முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்ப்ட்டு இருக்கிறாள். ஹென்னாவுடன் அங்கு பணியில் இருந்த சில பெண்களும் வழக்கில் இருந்தனர். ஆனால் அனைத்து பெண்களும் ஹென்னா அதற்கு முழுக்காரணம் என்றும் அவள் தான் தீயிட்டு கொளுத்த குறிப்பெழுதியதாக குற்றம் சுமத்துகின்றனர். பல வருடங்களுக்கு முன் எழுதிய குறிப்புகள காணமல் போய் விட்டதால் ஹென்னாவின் கையழுத்தை பரிசோதிக்க சொல்கிறார் நீதிபதி. ஹென்னா எதையும் எழுதாமல் குற்றத்தை ஒப்பு கொள்வதாக கூறுகிறாள்.


ஹென்னாவிற்கு ஆயுள் தண்டனையும் மற்ற பெண்களுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கிறார் நீதிபதி. வேதனையுடன் வீடு திரும்புகிறான் மைக்கேல். வருடங்கள் கடக்க மைக்கேலுக்கு திருமணமாகி பெண் குழந்தையும் பிறக்கிறது. மனைவியுடன் மனவேற்றுமையால் விவாகரத்தும் முடிந்து விட மகளுடன் தனியே வசிக்கிறான் மைக்கேல்.


ஹென்னாவுடன் வாசித்து மகிழ்ந்த அதே பழைய இலக்கியங்களை தானே மீண்டும் வாசித்து டேப்ரிகார்டரில் பதிவு செய்து சிறைச்சாலையில் உள்ள ஹென்னாவிற்கு அனுப்பி வைக்கிறான் மைக்கேல். ஹென்னாவும் அளவற்ற மகிழ்ச்சியுடன் அனைத்தையும் தினமும் கேட்கிறாள். மைக்கேல் அனுப்பும் கேசட்டுகளை கேட்டு குழந்தை போல சிறிய சிறிய கடிதங்களை மைக்க்கேலுக்கு அனுப்புகிறாள் ஹென்னா. ஆனால் மைக்கேல் பதில் எழுதுவதோ நேரில் சென்று ஹென்னாவை சந்திப்பதோ இல்லை.ஆனால் ஹென்னாவுடன் பழைய நினைவுகளை அவளுக்கு வாசித்து காண்பித்த புத்தகங்களை போல புரட்டி பார்க்கிறான் மைக்கேல்.



சில மாதங்கள் கழித்து சிறைச்சாலையிலிருந்து மைக்கேலுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. இன்னும் சில நாட்களில் நன்நடத்தை காரணமாக ஹென்னா விடுதலை அடையபோகிறாள் என்றும் அவள் வெளியில் தங்க ஏதாவது ஏற்பாடு செய்யவும் என்று சிறைச்சாலை அதிகாரி கூறுகிறாள். பல வருடங்கள் கழித்து ஹென்னாவை மீண்டும் சிறைச்சாலையில் சந்திக்கிறான் மைக்கேல். தலை நரைத்து,நடை தளர்ந்து, உடல் நலிந்து காணப்படுகிறாள் ஹென்னா. "Have you spent much time thinking about the past?" என்று கேட்கிறான் மைக்கேல். அதற்கு "It doesn't matter what I think. It doesn't matter what I feel. The dead are still dead" என்று பதிலுரைக்கிறாள் ஹென்னா. அடுத்த வாரம் அவள் விடுதலையானதும் தொலை தூரத்தில் அவள் தங்க ஒரு சிறிய இடமும் அவனுக்கு தெரிந்த நண்பரிடம் சிறிய வேலையும் ஏற்பாடு செய்திருப்பதாய் கூறுகிறான் மைக்கேல். பதில் ஏதும் கூறாமல் அமைதியாய் இருக்கிறாள் ஹென்னா.


அடுத்த வாரம் அவள் விடுதலையாகும் நாளில் பூங்கொத்துடன் அவளை காண வருகிறான் மைக்கேல். ஆனால் ஹென்னா சில நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக அறிந்து அதிர்ச்சி கொள்கிறான் மைக்கேல்.


மைக்கேலுக்காக அவள் சிறிய குறிப்பெழுதி இருப்பதாக சிறைச்சாலை அதிகாரி கூறுகிறாள். அதில் தனக்கு பல வருடங்கள் எழுத படிக்க தெரியாதென்றும் அதனாலேயே மைக்கேலை இலக்கியங்களை வாசிக்க கேட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும் பின்னர் சிறை வாழ்க்கையில் மட்டுமே எழுத படிக்க கற்று கொண்டதாகவும் எழுதி இருப்பதை படித்ததும் மைக்கேல் சொல்ல முடியாத வேதனையடைகிறான். அது மட்டுமல்லாது இத்தனை வருட சிறை வாழ்க்கை வேலையில் கிடைத்த தொகையெல்லாம் சேமித்து ஒரு சிறு தேநீர் டப்பாவில் சேர்த்து வைத்திருப்பதையும் அதை சர்ச் எரிப்பில் இறக்காமல் உயிர் பிழைத்த இலியானா என்ற பெண்ணிடம் அளித்து விடுவதாக எழுதி இருக்கிறாள். இலியானா தற்போது அமெரிக்காவில் வாழ்வதை அறிந்த மைக்கேல் அமெரிக்காவில் அவளை சந்தித்து நடந்த அனைத்தையும் கூறுகிறான். அந்த தொகையை படிப்பறிவில்லாத யூத மக்களின் கல்வி செலவுக்காக பயன்படுத்த வும் யோசனை கூறுகிறான். இலியானாவும் சம்மதித்து ஹென்னா பெயரில் ஒரு அறக்கட்டளை துவங்கி அப்படியே செய்வதாய் உறுதியளிக்கிறாள். அந்த தேநீர் டப்பாவை மட்டும் தன் தாயின் நினைவாக பாதுகாக்க விரும்புவதாய் கூறுகிறாள் இலியானா.


எப்போதும் ஆச்சரியங்களை விரும்புவதாக கூறும் தனது ஆறு வயது மகள் ஜீலியாவுடன் ஹென்னாவின் கல்லறைக்கு சென்று நினைவஞ்சலி செலுத்தி விட்டு ஆச்சரியங்கள் நிரம்பிய ஹென்னாவின் வாழ்க்கையை அவளுக்கு சொல்ல ஆரம்பிப்பதாய் திரைப்படம் நிறைவு பெறுகிறது.





இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவர் Stephen Daldry என்ற ஹாலிவுட் இயக்குநர். பல சர்வேத விருதுகளை வென்றவர். மூன்று முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். மிக சிக்கலான கதையை திறமையாக கையாண்டு அருமையாக இயக்கியிருக்கிறார்.



மைக்கேலாக நடித்திருப்பது Ralph Fiennes. நடிப்பில் முதிர்ச்சியும் அனுபவமும் பெற்றவராக அமைதியாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.





ஹென்னாவாக நடித்திருப்பது பிரபல ஹாலிவுட் நடிகை Kate Winslet. நடு வயதில் காதலிலும் காமத்திலும் துள்ளும் இளமையுடனும் அதே நேரத்தில் வயதான வேடத்தில் அமைதியிடனும் நடிப்பின் உணர்ச்சி குவியல் என்றால் மிகையில்லை. இத்திரைப்படத்தில் நடித்ததற்காக பல சர்வதேச விருதுகளுடன் ஆஸ்கர் விருதினையும் பெற்றிருக்கிறார்.


சிறந்த திரைக்கதை, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு என்று இருபதுக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வாரி குவித்த திரைப்படம் The Reader


சந்தர்ப்பம் கிடைத்தால் அவசியம பாருங்கள்.



உடனே பார்க்க டிரைலர் இங்கே



டிஸ்கி: உலக சினிமா பதிவுகள் தொடரும்.

ஜெயா டிவியில்...




பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.


ஜீலை 29ம் தேதி வியாழக்கிழமை 8 மணிக்கு ஜெயா டிவியின் ”காலை மலர்” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக என்னுடைய உலக சினிமா பற்றிய உரையாடல் ஒளிப்பரப்பாகிறது. நண்பர்களுடன் பகிர்வதில் அளவற்ற மகிழ்ச்சி. நிகழ்ச்சியை பார்த்து நிறை / குறை சொல்லவும்.


தவிர்க்கவே முடியாத சில பல காரணங்களால் உலக சினிமா பதிவுகளை இட இயலவில்லை. Very very sorry... இனி தொடர்ந்து எழுதுவேன்.
உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி.



டிஸ்கி: அடிக்காத குறையாய் திட்டி தீர்த்த பதிவர் மயில் ராவணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

சில்ரன் ஆஃப் ஹெவன் இயக்குநர் மஜித் மஜிதி



சினிமா என்றாலே நாலு பாட்டு ஐஞ்சு ஃபைட்டு என்று நம்பிக்கொண்டிருக்கிறான் தமிழ் ரசிகன். விஜய், அஜித், நமீதா, நயன்தாரா தாண்டி அவன் சிந்திப்பதே இல்லை.


ஆனால், இதையெல்லாம் தாண்டி உலக சினிமா என்கிற ஒன்று இருக்கிறது. அது என்ன உலக சினிமா..? ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், (அப்படி சொன்னால் நம்ம கமலுக்கு கோவம் வரும். வேறு என்ன சொல்ல..?) ஏன் டோலிவுட் கூட இருக்கிறது. ஆனால், எந்தத் திரைப்படமும் உலக தரம் என்கிற அளவுகோலை வைத்துக்கொண்டு எடுக்கப்படுவதில்லை.


திரைப்படம் உருவாக்கும் கதைகள், சூழல், பாத்திரங்கள், நடிப்பு முதலியவற்றால் மட்டுமே அது உலகத் தரத்தை அடைகிறது. சுருங்கச சொன்னால், உலக மக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கும்படியும் பாராட்டும்படியும் அமைந்தால் அது உலக சினிமா ஆகிறது.


உலக சினிமாவில், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் பெற்ற வெற்றிகளிலேயே மிகவும் பிரபலமானது ஈரானிய திரைப்படங்கள்தான். கடுமையான தணிக்கை முறைக்கு பிறகு வெளிவரும் சூழலில், இது எப்படி சாத்தியமாகிறது?


வாழ்வை மிக நெருக்கமாக காட்டுவதாலும் அதன் அசல் (அஜித்தின் அசல் அல்ல) தன்மையோடு பேசுவதாலும், ஹீரோ வில்லன் என்கிற எத்தகைய லோக்கல் பார்முலாக்களும் இல்லாது காதல், நேசம், அன்பு, பாசம் அனைத்தையம் யாதார்த்தமாக சித்தரிப்பதால் இது சாத்தியப்படுகிறது. அது மட்டுமல்லாது பாரசீக மஸ்னவி, கஜல் போன்ற இசை மரபின் வழமையிலும் திரைப்படங்கள் வெளியாகி ஒரு கவிதையாய் மலர்ந்து மகிழ்ச்சியூட்டுகின்றன.


அப்படி உலகத் தரத்தில் தனது படைப்புகளை அளிப்பவர்தான் ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி. 1959, ஏப்ரல் 17-ல் இரானில் பிறந்து வறுமையில் வாடியவர். 12 வயதில் தெருதெருவாக இனிப்பு மற்றும் ஜஸ் விற்றும் பள்ளிப் படிப்பை மேற்கொள்ள முடியாமல் பிறகு டெஹ்ரானில் உள்ள நாடக கல்லூரியில் சேர்ந்தார்.


1978,- 79-ல் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டார். சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். என்றாலும் இயக்குநராக வேண்டும் என்பதே இவரது பேரார்வமாக இருந்தது.


1992-ல் தனது முதல் திரைப்படமான Badak-ஐ திரைக்கதை எழுதி இயக்கினார்.




1996-ல் வெளிவந்தது Pedar(Father). நாம் எல்லோரும் நம் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் வாழும் இந்த வேளையில் எத்துனையோ பேர் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் இல்லாத அல்லது இழந்துவிட்ட தங்களின் உறவுக்காக ஏங்கிக்கொண்டுதான் இருப்பார்கள். அப்படி தந்தையின் பிரிவால் துடிக்கும் ஒரு சிறுவனின் கதைதான் இந்தத் திரைப்படம்.




'Children of Heaven' பல்வேறு உலகத் திரைப்பட அரங்கில் விருதுகளை வாரிக்குவித்த படம். கோயிலில் அல்லது திருமண மண்டபத்தில் தொலைத்துவிடுவோமோ என்று நாம் கழற்ற யோசிக்கும் ஒரு 'காலணி(ஷூ)'தான் திரைப்படத்தின் கதாநாயகன். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த இப்படம், அண்ணன் தங்கையான ஒரு சிறுவனையும், சிறுமியையும் பற்றிக் கூறுகிறது. குழந்தைகள் ஒரு விஷயத்தை எத்தனை நேர்மையாக, அதே நேரம் எவ்வளவு தீவிரத்துடன் அணுகிறார்கள் என்பதை கலையமைதி கெடாமல் சொல்கிறது. 1997-ம் வருடம் 'மான்டர் உலகத் திரைப்பட விழா'வில் நான்கு விருதுகளைப் பெற்றதுடன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இரானிய திரைப்படமும் இதுவே.






1999-ல் வெளிவந்த The Colour of Paradise திரைப்படம், அப்பாவின் இரண்டாவது திருமண ஆசையால் அலைக்கழிக்கப்படும் பார்வையற்ற சிறுவன் மொஹமதுவைப் பற்றியது. இந்தப் படத்தில் மகன் கண் பார்வையில்லாதது ஒரு ஊனமென்றால், தந்தையும் மன ஊனம் கொண்டவர் என்பதை சொல்லாமல் சொல்கிறார் இயக்குநர். இதுவும் பல விருதுகளை பெற்றது. அந்த ஆண்டு வெளிவந்த பத்துத் திரைப்படங்களில் சிறந்த ஒன்றாக டைம் பத்திரிகை இப்படத்தை தேர்வு செய்திருந்தது.





Baran (Rain) என்கிற படம் 2001-ம் ஆண்டு வெளியானது. இது பதின்ம வயதில் இருக்கும் லத்தீப் என்கிற இளைஞனின் கதை. அகதியாக இருக்கும் குடும்பதிலிருந்து வறுமை காரணமாக ஆண் வேடமிட்டு வரும் பாரன் என்ற பெண்ணை சந்திக்கிறான். அவனுடைய காதல், மழைபோல அந்த வாலிபனின் மனதில் பெய்துவிட்டு செல்வதாக அற்புதமாகக் காட்டியிருப்பார் மஜித் மஜிதி. அந்த இளம் பெண்ணின் முகத்தை திரைப்படம் முடியும்வரை காட்டாமல் அவள் விட்டுச் சென்ற காலடிச் சுவட்டை மழை நனைப்பதோடு படம் நிறைவடைகிறது. ஸ்கீரின் சர்வதேச விருதுடன் 13 உலக விருதுகளை வென்றது இப்படம்.






The Willow Tree (2005) ஒரு கண் பார்வையற்ற பேராசிரியர் யூசுப். மற்ற எல்லோரையும்போல தனக்கும் கண் பார்வை வேண்டும். இந்த உலகத்தைப் பார்க்க வேண்டும். தனக்கு பிரியமான மனிதர்களை நோக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்குள் எழுகிறது. ஆனால், பார்வை கிடைத்ததும் அவர் அடையும் மன வேதனைகளையும் ஏமாற்றத்தையும் சித்தரிக்கும் அதி உன்னதமான திரைப்படம் வில்லோ ட்ரீ. டோரண்டோ திரைப்படவிழாவில் விருது பெற்றதுடன் பல உலக விருதுகளை அள்ளியது.







Song of Sparrows (2008) தெஹ்ரைனிலுள்ள தீக்கோழி பண்ணையில் பணிபுரிகிறான் கறீம். வறுமையான குடும்ப சூழ்நிலையில் குழந்தைகளை பாதுகாக்க அவன் படும் அல்லல்கள், தாயன்புக்குச் சற்றும் குறைந்ததல்ல என்று புரிய வைக்கிறது இப்படம். இதில் தந்தையின் அன்பு, பாசம், பிரியம் ஆகியவற்றை அற்புதமாகக் காட்டியிருப்பார் மஜித். பெர்லின் திரைப்படவிழா விருதுடன் இப்படமும் பல விருதுகளை அள்ளியது.


இவை தவிர எண்ணற்ற குறும்படங்களையும் ஆவணபடங்களையும் எடுத்துள்ளார் மஜித் மஜிதி.


2008ல் நடந்த சீன ஒலிம்பிக்ஸ்ஸில் பெய்ஜிங் பற்றிய குறும்படம் தயாரிப்பதற்காக சீன அரசாங்கம் இவருடன் சேர்த்து 5 மிகச்சிறந்த இயக்குநர்களை தேர்வு செய்தது.உலகத்தின் பல விருதுகளை பெற்றதுடன் சென்ற வருடம் Starz Denver சர்வதேச திரைப்படவிழாவில் வாழ் நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். இவரது கலைப்பயணம் தொடர்கிறது.


உலகின் எல்லா இயக்குநர்களுக்கும் எது பிரச்சினையோ, அதுதான் இவருக்கும் இருக்கிறது. ஒரு திரைப்படம் வெற்றியடையுமா? அல்லது தோல்வியடையுமா என்று எவருக்கும் தெரியாது. ஒரு தயாரிப்பாளனை திருப்திபடுத்துவதான் முதல் வேலை என்கிறார் மஜித். இருந்தாலும், பல திரைப்படங்கள் உங்களை மகிழ்வித்து நாற்காலியோடு உட்காரவும் விசிலடிக்கவும் வைக்கிறது. ஆனால், தியேட்டரை விட்டு வெளியேறும்போது ஏமாற்றப்பட்டது மெள்ள மெள்ள தெரிய வரும்.


ஒரு நல்ல படம் வாழ்க்கையில் நெருக்கத்தை ஏற்படுத்தவதாக இருக்க வேணடுமே தவிர பார்வையாளனை ஒரு பிணைக்கைதியாக பிடித்து வைத்திருக்கக் கூடாது. வாழ்வின் உண்மையைக் கண்டடையும் பயணமாக அது தொடங்கவேண்டும். ஒரு திரைப்படம் என்பது கலையாக, அன்பாக, நேசமாக, காதலாக யதார்தத்தின் ஒரு பதிவாக வெளிப்பட்டால் மட்டுமே அது உலக சினிமாவாக போற்றப்படுகிறது.





டிஸ்கி: சூரிய கதிர் (ஜன 16-31) இதழில் வெளியான கட்டுரை.


Rooster's Breakfast











ஜிரோ (அவன் பெயரே அதுதான்) வளர்ந்து வரும் ஒரு கார் மெக்கானிக். முதலாளிக்கு விசுவாசமான ஊழியன். ஆனால் முதலாளிக்கோ ஏகப்பட்ட கடன் பிரச்சனைகள். மெக்கானிக் ஷெட்டை இழுத்து மூடி விட நினைக்கிறார். பல வருடமாக தன்னிடம் வேலை செய்யும் ஜிரோவை என்ன செய்வது..?? வெளியூரில் வசிக்கும் தனது நீண்ட நாள் நண்பரும் தொழிலில் மூத்தவருமான கஜா விடம் அனுப்பி வைக்கிறார்.


ஜிரோவும் வேறு வழியில்லாது தொலை தூர பயணத்துக்கு ஆயத்தமாகி கஜா இருக்கும் ஊருக்கு வந்தடைகிறான். கஜாவும் நண்பரின் சிபாரிசிற்கு இணங்கி ஜிரோவை வேலையில் சேர்த்து கொள்கிறார். ஆனால் கஜா பழைய முதலாளி போல கருமமே கண்ணாயினாரல்ல. நல்ல சொகுசு பார்ட்டி. தனிக்கட்டை வேறு. சதா தண்ணி, சீட்டு என்று கொண்டாங்களுடன் கொஞ்சம் வேலையும் செய்வார்.


அந்த ஊரில் கைதேர்ந்த மெக்கானிக்கான கஜாவை விட்டால் வேறு ஆள் கிடையாது. நண்பர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாலும் வாடிக்கையாளர்களுக்கு பஞ்சமில்லை.


ஷெட்டின் மாடியிலேயே அவனுக்கு தங்குமிடம் ஒதுக்க படுகிறது. ஆனால் ஜிரோவிற்கு தொழில் மேல் பக்தி. எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறான். கஜாவை குருவாக ஏற்று கொண்டு தொழிலை நன்கு கற்க வேண்டும் என்று பேராவல்.



ஆனால் மாஸ்டர் கஜவோ முதலில் பெண்களை வசியபடுத்தும் கலையையே கற்று கொள்ள வேண்டுமென்கிறார். இல்லாவிட்டால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது என்று தினமும் அட்வைஸ் வேறு. வேலை கற்று கொள்வதற்காக வந்த இடத்தில் இது என்னடா வம்பா இருக்கே என்று தயங்கி தயங்கி அவர் சொல்லும் ஆலோசனகளே கேட்ட படியே இருக்கிறான்.



கஜாவின் நண்பர் லிபேக். வெளியூரில் சூதாட்ட கிளப்பும் நவீன பாரும் வைத்து இருக்கிறார். கையில் நல்ல சில்லறை. மனைவி பிரான்ஜாவை கண்டு கொள்வதேயில்லை. அடிக்கடி இருவருக்கும் சண்டை வேறு. அன்புக்காக ஏங்கி கிடக்கிறாள் பிரான்ஜா.




பிரான்ஜாவின் கார் அடிக்கடி விபத்தில் சிக்க கஜாவின் ஷெட்டுக்கு வருகிறது. அதை பழுது பார்க்கும் வேலை ஜிரோவிற்கு. இந்த சூழ்நிலையில் ஜிரோவும் பிரான் ஜாவும் நெருங்கி பழகுகிறார்கள். தனது குரு கஜா சொல்லி கொடுத்த ஐடியாக்கள் எல்லாம் ஒர்க் அவுட் ஆகிறது. பிரான்ஜாவும்
ஜிரோவின் அன்பில் அடைக்கலமாகிறாள். அடிக்கடி சந்திப்பும் நிகழ்கிறது.




குரோசிய நாட்டு பாப் பாடகி செவரினாவின் தீவிர ரசிகர் கஜா. ஏன்..? பக்தர் என்றே சொல்லலாம். கஜாவிற்கோ நீண்ட நாள் கனவு ஒன்று உண்டு. அதாவது செவரினாவின் இசை கச்சேரியை நேரில் காண வேண்டுமென்பதே. அவளது போஸ்டருக்கு சூடம் கொளுத்தாத குறையாய் தினமும் ஒர்க் ஷாப்பில் வைத்து பூஜித்து வருகிறார்.



கஜாவின் எண்ணப்படியே செவரினாவின் இசை கச்சேரி உள்ளூரில் நடக்க இருப்பதாய் செய்தி வரவே துள்ளி குதிக்கிறார்.கஜா.



இதையறிந்த லிபேக் செரினாவின் மானேஜர் தன் நண்பன் என்றும் எப்படியாவது டிக்கெட் தருவதாய் உறுதியளிக்கிறான். அதை தவிர செரினாவுடன் ஒரு இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்வதாய் உறுதியளிக்கிறான். ஆனால் அதற்கெல்லாம் பிரதிபலனாய் தனது பழைய காரை பத்து பைசா செலவில்லாது புதிய காராக மாற்றி தரவேண்டும் என்பதே நிபந்தனை.



டீலா.. ?? நோ டீலா ..?? என்கிறான் லிபேக்.



ஏற்கனவே பல முறை ரிப்பேர் செயததற்கு பணம் பாக்கி என்று கோபித்து கொள்கிறார் கஜா. கணக்கு எப்ப்பவோ சரியாகி விட்டது என்கிறான் லிபேக். இருவருக்கும் சண்டை முற்றவே நண்பர்கள் தலையிட்டு பஞ்சாயத்து செய்கின்றனர்.


பல நாள் கனவை கைவிட முடியாமல் உள்ளுக்குள் புகைந்து கொண்டே
டீல் என்று ஒப்பு கொண்டு அந்த நாளுக்காக காத்திருக்கிறார் கஜா.



காரை பழுது பார்க்கும் பணியும் தொடங்கி விட்டது. அதற்காக லிபேக்கின் மனைவி பிரான்ஜாவும் அடிக்கடி ஒர்க் ஷாப்பிற்கு வருகிறாள். மாடியிலே தனியறையில் இருவரும் பொழுதை கழிக்கினறனர். இந்த விஷயம் அரசல் புரசலாக கஜாவிற்கு தெரிய வருகிறது. லிபேக்கின் மீதுள்ள கடுப்பால் கண்டும் காணாமல் இருக்கிறார்.



ஆனால் லிபேக்கால் ஜிரோவிற்கு ஆபத்து வரலாம் என்று எச்சரிக்கிறார். முன் பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கியையும் அவனிடம் தருகிறார். முதலில் கொஞ்சம் மிரண்டு போகிறான் ஜிரோ. எதற்கும் ஜாக்கிரதையாய் இரு என்று அறிவுரை கூறுகிறார்.



பயத்திலும் ஜிரோ பிரான்ஜா காதல் தொடர்கிறது.



இசைகச்சேரி நடைபெறும் நாளும் வருகிறது. டிப்டாபாக உடையணிந்து நண்பர்களுடன் ஆவலுடன் கச்சேரிக்கு செல்கிறார் கஜா. அளவில்லா மகிழ்ச்சியுடன் தனது கனவு தேவதையை நேரில் கண்டு இசை கச்சேரியை மெய்மறந்து ரசிக்கவும் செய்கிறார்.



மறுநாள் இரவு கஜாவின் ஒர்க் ஷாப்பிற்கே செரினா வர இருப்பதாகவும் அவருடன் டின்னர் முடித்து அவருடன் தங்க இருப்பதாய் கூறவே ஆனந்த கூத்தாடுகிறார் கஜா.



நம்ம ஊரில் ஆயுத பூஜைக்கு அலங்கரிப்பது போல ஒர்க் ஷாப்பை அலங்கரிக்கிறார். எல்லா வித ஏற்பாடுகளையும் கண்ணும் கருத்துமாய் செய்து விட்டு இரவு முழுவதும் காத்திருக்கிறார் கஜா.



காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடாத குறை தான். விடியற்காலை ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்குகிறாள் ஒரு பெண். அது செவரினா தானா ? கஜாவால் நம்ப முடியவில்லை. . பாதி தூக்கத்திலிருக்கிறார் கஜா. ஆனாலும் தனது கனவு தேவதை வந்ததையெண்ணி உற்சாகத்தில் குதிக்கிறார்.



இருவருக்கும் இனிய இரவாகிறது. பெரு மகிழ்ச்சியில் அமைதியாய் காலையில் காத்திருக்கிறார்.



ஜிரோவை காணவில்லை. விடிந்ததும் வருகிறான். நடந்ததையெல்லாம பெருத்த மகிழ்ச்சியுடன் அவனிடம் கூறுகிறார். I had Rooster's breakfast என்று கூறி அதன் அர்த்ததையும் வெட்கத்துடன் கூறுகிறார் கஜா.



எதற்கும் பதிலோ ஆமோதிப்பா இல்லாமல் மெளனமாய் அமர்ந்திருக்கிறான் ஜிரோ. மெளனத்தின் அர்த்தம் புரியாமல் இரவு எங்கு போனான்.. ஏன் வரவில்லை என்று அவனை கேள்விகளால் துளைத்து எடுக்கிறார் கஜா. நீண்ட நேர மொளனத்திற்கு பிறகு கஜா ஏமாற்றப்பட்ட விஷயத்தை போட்டு உடைக்கிறான் ஜிரோ.



இரவு அவன் பிரான்ஜாவுடன் இருந்ததாகவும் இங்கு வந்தது செவரினாவே இல்லை என்றும் அவளை போலவே தோற்றமளிக்கும் வேறு ஒரு மாடல் அழகி என்றும் கூறுகிறான். இதையெல்லாம் கூறியது பிரான்ஜா என்றும் கூறுகிறான்.


மனம் உடைந்து போய் தனியே அமர்ந்து கொள்கிறார். அந்த நேரம் பார்த்து லிபேக் அங்கு வருகிறான். வந்ததும் ஜிரோவின் கையில் கட்டியிருக்கும் செயினை காண்கிறான். அது பிரான்ஜாவுடையது. அவனுக்கு அனைத்தும் புரிந்து விட்டது.. ஆனால் அது தெரியாமல் லிபேக்கிற்கு சிகரெட்டை நீட்டுகிறான் ஜிரோ.


ஆத்திரத்துடன் லிபேக் ஜிரோவை தாக்க முற்படுகையில் உள்ளேயிருந்து வந்த கஜா லிபேக்கை சுட்டு தள்ளுகிறார் கஜா. அதிர்சியும் வேதனயுடன் கண நேரத்தில் நடந்ததை புரிந்து கொள்ளவும் முடியாமல் திகைத்து போகிறான் ஜிரோ.



கஜா கைதாகி சிறையில் இருக்க பிரான்ஜாவுடன் அவளது மகனையும் சேர்த்து கொண்டு செவ்வனே ஷெட்டை நிர்வகிக்கிறான் ஜிரோ.



ஒரு நாள் சிறையில் சென்று கஜாவை பார்க்கிறான். கஜா தனக்கு பிடித்த ஒயினையும் பழங்களையும் அடுத்த முறை வரும் போது வாங்கி வர சொல்கிறார். தான் மகிழ்ச்சியாய் இருப்பதாய் வெளியில் வரும் வரை ஷெட்டை கவனத்துடன் பார்த்து கொள்ள அறிவுரை கூறுகிறார் கஜா.



இன்னும் அவரை புரிந்து கொள்ள முடியாதவனாய் கஜாவை வியந்து எண்ணியபடியே ஊரை நோக்கி பயணிக்கிறான் ஜிரோ.




கஜாவாக நடித்த Vlado Novak. நடிப்பு மிக மிக யதார்த்தம். நடிப்பு கலையை முறையாக பயின்றவர். மிக்சிறந்த நாடக நடிகர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களிலும் தொலைகாட்சி தொடர்களிலும் நடித்தவர். பல வித உணர்ச்சிகளை அத்தனை இயல்புடன் நடித்திருப்பதை எத்தனை பாராட்டினாலும் தகும்.




ஸ்லோவினிய நாட்டு திரைப்படமான இந்த திரைப்படம் வெளிவந்தது 2007.

இந்த நாடு யூகோஸ்லோவியாவிலிருந்து 1992 தான் பிரிந்து தனிநாடாகியது. இந்த நாட்டின் மிகப்பெரிய ஹிட் படங்களுள் ஒன்று. ஐந்து சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது.







இத்திரைப்பத்தை இயக்கியிருப்பவர் Marko Naberšnik. 1996முதல் குறும்படங்களை இயக்கி வருபவர். திரைப்பட இயக்கத்தை முறையாக பயின்றவர். 2000ம் ஆண்டு இவர் இயக்கிய With Love என்ற குறும்படம் பல விருதுகளை வென்றது. இவர் இயக்கிய முதல் முழூ நீள திரைப்படம் இது.




சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்க
ள்.




வழக்கப்படி பார்க்க டிரைலர் இங்கே

The Pope's Toilet








பீட்டோ தன் மனைவியுடனும் ஒரே செல்ல மகளுடனும் லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே நாட்டில் உள்ள மெலோ என்ற சிறிய ஊரில் வசித்து வருபவன். மெலோ பிரேசில் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ளதால் சைக்கிளில் கூட சென்று வரலாம்.



விவசாய நாடான உருகுவேயில் வெளி நாட்டு பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. போதிய படிப்பும் சொந்தமாக நிலமும் இல்லாத பீட்டோவிற்கு வெளிநாட்டு பொருட்களை சைக்கிள் மூலம் கடத்தி வருவதே வேலை. பெருமளவு பொருட்கள் பிரேசில் நாட்டிலிருந்து கடத்தி வரப்படுகிறது. தினசரி வியாபாரிகளுக்கு தேவையான பொருட்களை தினமும் 60 கி.மீ தூரத்திலிருந்து சைக்கிளில் கொண்டு வர வேண்டும். சாலை வழியாக வர இய்லாது. எல்லையோரத்தில் இராணுவ சோதனை முகாமும் சுங்கச்சாவடியும் உண்டு. வயல் வெளி மூலம் தான் ஊரை சுற்றி 60 கிலோ மீட்டர்களை ஒவ்வொரு முறையும் சைக்கிள் மிதித்து கடக்க வேண்டும். தினசரி குறைந்த பட்சம் இரண்டு மூன்று டிரிப் அடித்தால் தான் சாப்பாட்டுக்கே வழி. வறுமை வேறு.



பீட்டோவின் மகளான சில்வியாவிற்கு தன் தந்தையின் தொழில் அறவே பிடிக்கவில்லை. ஆனால் எப்போதும் தந்தையின் மீது கோவம் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு நன்கு படித்து நியூஸ் ரிப்போர்ட்டராக வர வேண்டும் என்பதே ஆசையும் கனவுமாக இருக்கிறது. சதா கையில் கிடைத்த பொருட்களை வைத்து கொண்டு மைக்கில் பேசுவது போல பேசி கொண்டே இருக்கிறார்கள். தன் வருமானத்தில் அவ்வளவு படிக்க வைக்க இயலாதென்று அடிக்கடி பீட்டோ கூறவே சில்வியாவிற்கு தந்தை மீது தீராக்கோபம்.



ஒரு நாள் திடீரென்று ஒரு மகிழ்ச்சியான செய்தி வருகிறது. அதாவது புனித போப்பாண்டவர் இவர்கள் ஊருக்கு வரப்போவதாக வானொலியிலும் தொலைகாட்சிகளும் செய்தி வரவே மக்கள் மகிழ்ந்து போகிறார்கள். ஊடகங்களுக்கு இந்த ஒரு செய்தி போதாதா..? தினம் தினம் 24 மணி நேரமும் இதை பெற்றி செய்தி குறிப்புகளும், நடக்கப்போவது என்ன..?? சிறப்பு பார்வைகள் என்று சகட்டு மேனிக்கு நிகழ்சிகளை நடத்துகின்றனர்.



அது தவிர போப்பின் வருகையால் முப்பது முதல் நாப்பதாயிரம் வரை பெருமளவு பக்தர்களும் மெலோ நகரக்கு வரப்போவதாக அறிவிக்கின்றனர். ஊர் மக்களின் சந்தோஷ மிகுதியால் இந்த சந்தர்பத்தை எப்படியாவது பயன் படுத்தி நாலு காசு பார்த்து விட வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் ஐடியாக்கள் குவிகின்றது.



வரப்போகும் ஆயிரமாயிரம் மக்களுக்கு என்னென்ன தேவை என்று பட்டியிலிட்டு அவரவர் ஆயுத்தமாகின்றனர். தேநீர் க்டை, பிஸ்கெட் தயாரிப்பு, பலூன் விற்பனை, பேட்ஜிகள், உருவப்படங்கள், நினைவு பொருட்கள், போப்பின் போஸ்டர்கள் என தயாரிப்பு வேலைகளில் ஈடுபட பீட்டோவிற்கு ஒரு யோசனையும் உதிக்கவில்லை.



பீட்டோவின் வீட்டில் சரியான கழிவறை வசதியில்லை. ஊரில் வசிக்கும் மக்களுக்கே சரியான வசதியில்லாத போது போப்பின் வருகையை ஒட்டி வரப்போகும் 30 ஆயிரம் பேருக்கு எப்படி வச்தி கிடைக்கும் என்று நினைக்கிறான். அதனால் ஒரு கழிவறை கட்டி அதன் மூலம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போடுகிறான். இது தான் மிக்ப்பெரிய ஐடியாவாகவும் பண்ம் கொட்ட போகிறது என்று மனைவியிடமும் கூறுகிறான். முதலில் சந்தேகத்துடன் நடக்குமா..?? என்கிறாள். ஆனால் பீட்டோவின் பேச்சிலும் நம்பிக்கையிலும் மயங்கி அவளும் சம்மதிக்கிறாள்.



ஆனால் கழிவறை கட்ட காசு வேண்டுமே. இன்னும் பல டிரிப்களை அடிக்க ஒப்பு கொள்கிறான். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்து சிறிது பணமும் சேர்க்கிறான். இதற்கிடையே ஒரு நாள் சுங்கச்சாவடி சோதனையில் மாட்டி கொள்கிறான். சாவடியில் மொத்த பொருட்களையும் இழக்கிறான். தொடர்ந்து டிரிப் அடிப்பதால் இவன் மீது ஒரு கண் வைக்குமாறு உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். வெறுப்பிலும் விரக்தியிலும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மது அருந்தி கலாட்டா செய்கிறான். இதை அறிந்த வியாபாரிகள் அவனுக்கு டிரிப் தர விரும்பவில்லை.



ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க கழிவறையை கட்ட எப்படியாவது தொடங்க வேண்டும் என்று பீட்டோவிற்கு படபடப்பு அதிகமாகிறது. மற்றொரு சுங்கசாவடி அதிகாரி பீட்டோவிற்கு உதவ முயலுவதாகவும் ஆனால் அவருக்காக சில பொருட்களை கடத்தி வரவேண்டும் என்று யோசனை சொல்கிறான் நண்பன் ஒருவன். எப்படியாவது வேலை கிடைத்தால் சரி என்று சம்மதிக்கிறான் பீட்டோ. சிறிது முன் பணமும் கடனாக அளிக்கவே மகிழ்ச்சியுடன் கழிவறை கட்டட வேலைகள் ஆரம்பிக்கிறான். அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளவர்களும் பீட்டோவிற்கு கட்டட வேலையில் உதவுகின்றனர்.



நாளக்கு நாள் ஊடகங்கள் செய்திகளை அள்ளி கொட்டி கொண்டேயிருக்கின்றன. வீதி வீதியாக மக்களிடமும் வியாபாரிகளிடமும் என்ன பொருட்கள் விற்க போகிறார்கள் என்று கேட்டு பேட்டிகளை ஒளிப்ரப்ப மெலோ நகர மக்களின் மகிழ்ச்சிக்கு அள்வேயில்லை. வங்கியிலும் செல்வந்தர்களிடமும் அதிக வட்டிக்கு பணம் வாங்கி பொருட்களை மற்ற ஊர்களிலிருந்து வாங்கி குவிக்கின்றனர்.



போப்பின் வருகையின் நாள் நெருங்க நெருங்க ஊரே ஆரவாரமாயிருக்கிறது. பீட்டோவின் கழிவறை கட்டும் பணியும் வெகு வேகமாக நடக்கிறது. முக்கால் வாசி வேலை முடிந்து விட்ட நிலையில் கதவு மட்டுமே பொருத்த வேண்டும். ஆனால் கையில் காசில்லை. இன்னும் பல டிரிப்களை அடித்த வண்ணம் இருக்கிறான்.



சுங்கச்சாவடி அதிகாரியிடம் கடன் பெற்றதும் அவருக்காக கடத்தல் செய்வதும் மகள் சில்வியாவிற்கு தெரிந்து விடுகிறது. ஏற்கனவே தந்தையின் மீது இருக்கும் கோபம் அதிகரிக்க வீட்டில் வந்து தாயிடம் முறையிடுகிறார்கள். இனி பீட்டோவிடம் பேசுவதில்லை என்று இருவரும் அவனை புறக்கணிக்கின்றனர். உங்களுக்காக இத்தனை கஷ்டங்களையும் படுவதாக நொந்து கொள்கிறான் பீட்டோ. தன் குடும்ப நிலையையும் வறுமையும் தன் அருமை மகளின் நிராகரிப்பும் பீட்டோவிற்கு அதிக மன வேதனையளிக்கிறது. கழிவறை கட்ட அவனிடம் கடன் வாங்கியிருக்கிறேன். அதன் அடைத்தவுடன் அவனிடம் போக மாட்டேன் என்கிறான் பீட்டோ.



அதை எப்படி அடைப்பது என்று வேதனையுடன் கேட்கவே மகளின் கல்லூரி படிப்புக்காக தான் நெடுநாளாக சேமித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் கொண்டு வந்து கொடுக்கிறாள் மனைவி. அதில் சிறிது பணத்தை கடனுக்காக அடைத்து விட்டு மீத் பணத்தில் கழிவறைக்கு கதவு வாங்குகிறான். போப்பின் வருகையால் இன்னும் கூட்டம் அதிகரிக்க கூடும் என்றும் பக்தர்களின் வருகை ஐம்பதாயிரத்தை கூட தாண்டலாம் என்று ஊடகங்கள் ஆருடம் சொல்கின்றன.



கழிவறை உபயோகிக்க வரும் கூட்டத்தை எப்படி வரவேற்பது, அவர்களிடம் எப்படி பேசுவது, பணத்தை வசூல் செய்வது என்று மனைவிக்கும் மகளுக்கும் வகுப்புகள் எடுத்து ஒத்திகை பார்க்கிறான் பீட்டோ. இன்னும் சில டிரிப்புகள் மட்டுமே அடித்து விட்டால் நல்ல தொகை கிடைத்து விடும் ஆனால் தொடர்ந்து சைக்கிள் ஒட்டுவதால் பீட்டோவின் முழங்கால் பாதிக்க ப்டுகிறது. வலியும் அதிகரிக்கிறது. பெரிய துணி ஒன்றை கட்டி கொண்டு சில டிரிப்களை முடிக்க ஆயத்தமாகிறான்.



நாளை போப் வரும் நாள் என்று அறிவிப்பு வந்தாயிற்று. கழிவறைக்கு வேண்டிய பீங்கானை இன்னும் பொருத்தவில்லை. அதை வாங்க சைக்கிளில் பறக்கிறான். கையில் இருந்த காசையெல்லாம் செலுத்தி வாங்கியும் விடுகிறான். சைக்கிளில் கட்டி கொண்டு வழியில் திரும்பும் போது சுங்க அதிகாரி தம்மிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்த நிர்பந்திக்கிறார். இனி அவருக்கு வேலை செய்ய போவதில்லை என்று அறிந்ததும் ஆத்திரம் கொண்டு பீட்டோவை கடுமையான தாக்குவதுடன் சைக்கிளையும் அபகரித்து செல்கிறார்.



போப் வந்தாயிற்று என்று தொலைகாட்சிகளில் நேரடி ஒளிப்பரப்பும் தொடங்கியாயிற்று. செய்வதறியாது பீட்டோ கழிவறை பீங்கானுடன் வீடு நோக்கி ஒடுகிறான். இதை டிவியில் பார்த்த மகள் சில்வியாவின் கண் கலங்குகிறாள்.ஆனால் ஊருக்குள் வந்ததும் கூட்டமே காணவில்லை. மிக குறைந்த அளவே பக்தர்கள் வந்துள்ளனர். ஊடகங்கள் மட்டுமே நிரம்பி வழிகின்றன. வந்த பக்தர்களும் கூட போப்பின் பேச்சை மட்டும் கேட்டு விட்டு கிளம்ப தயாராகின்றனர்.



ஊர் மக்கள் அனைவரும் நொடித்து போகின்றனர். வந்த விலைக்கு தின் பண்டங்களை கூவி கூவி விற்க தொடங்குகின்றனர். பாதி கூட விற்பனையாகவில்லை. அனைத்து பொருட்களும் வீணாகின்றன. பீட்டோவின் கழிவறையை எட்டி பார்க்க கூட எவருமில்லை.



போப்பும் கிளம்பி போய் விடுகிறார். அனைத்து தின் பண்டங்களும் நாய்களுக்கும் பன்றிகளுக்கும் உணவாகிறது. மிச்சமிருந்த தின் பண்டங்களை தின்ன கூட அந்த சிறிய ஊரில் மிருகங்கள் இல்லை. ஊரே கடனாளியாகி சொல்ல முடியாத வேதனையில் துடிக்க அவர்க்ள் வாழ்வே போப்பின் வருகையால் வீழ்ந்து போனதாக நினைக்கின்றனர்.



ஊடகங்களின் அதீத கற்பனையும் விளம்பரமும் ஒரு ஊரின் வாழ்வாதாரத்தையே சூறையாடி விட்டது. பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பொறுப்பற்ற விளம்பர மோகத்தால் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து வட்டி கட்ட வேண்டிய நிலைமைக்கு ஆளாகின்றனர். இதற்கு யார் பொறுப்பாக முடியும் என்ற கேள்வியோடு திரைப்படம் முடிகிறது.



2007ல் வெளியான இந்த லத்தீன் அமெரிக்க சினிமா 1998ல் போப்பின் பயணத்தின் பின்னணையில் ஏற்பட்ட சில உண்மை சம்பவங்களால் உருவானது. இத்திரைப்படத்தை César Charlone & Enrique Fernández இருவர் இணைந்து எழுதி இயக்கியுள்ளனர்.

இருவரில் Cesar மிகச்சிறந்த ஒளிபபதிவாளர். ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர். ஒளிப்பதிவில் பல சர்வதேச விருதுகளை பெற்றவர் என்று திரைப்படம் பார்ப்பவர்களுக்கு சொல்ல தேவையில்லை. அத்தனை ரம்மிய்மான ஒளிப்பதிவுகள். பல காட்சிகள் இயற்கை ஒளியிலேயே படமாக்கப்பட்டுள்ளன. மலைகளும், ஓடைகளும் இயற்கை காட்சிகளை தன் காமிராவால் கண் முன்னே நிறுத்துகிறார். பீட்டோ ஒவ்வொரு முறையும் சைக்கிளில் செல்லும் போது அமைக்கப்பட்ட காட்சியமைப்புகளை விவரிக்க வார்த்தைகளில்லை.



திரைப்ப்டத்த்தில் நடிப்பும் பாத்திரங்களின் படைப்பும் அனைத்தும் யதார்த்தமாக சொல்வதுடன் தமது நோக்களிலிருந்து மாறாமல் திரைக்கதையை அமைத்துள்ளார்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு பாத்திர படைப்பும் தமது மன்சாட்சியை பிரதிபலிப்பதாயும் பீட்டோவும் மகளின் பாத்திர படைப்புகள் மூலம் வெளியாகிறது. குறைந்த வசனங்களுடன் கவித்துவமான காட்சிகளை கொண்ட லத்தீன் அமெரிக்க திரைப்படங்களுக்கு இந்த திரைப்படம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.



மகள் தன் மீது கோவம் கொண்டாலும் மகளின் மீதான அன்பும் மனைவியின் மீதான காதலும் பீட்டோவிற்கு இம்மியளவும் குறையாது மகளின் விருப்பபடி கடைசியில் அவன் இனி வேறு வேலை பார்ப்பதாக கூறும் காட்சி நெகிழ்வை தருகிறது.



பிரேசில்,மெக்ஸிகோ,கேன்ஸ் என்று பத்திற்கும் உலக பட விழாக்களில் பங்கு பெற்று பரிசை தட்டி சென்றுள்ளது என்றாலும் சர்ச்சைக்குரிய பெயர் என்று குறிப்ப்டபட்டு ஆஸ்கார் பட்டியலில் இடம் பெறாமல் போனது வருத்தமான செய்தியுமாகும்.


சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.



உடனே பார்க்க டிரைலர் இங்கே


Maria Full Of Grace {Spanish}













வர்ணிக்க முடியாத அழகுடன் பதினேழு வயது நிரம்பிய மரியா கொலம்பியாவில் வசித்து வருபவள். வயதான தாயும் மரியாவின் சகோதரியும் குழந்தையுடன் வீட்டிலிருக்க குடும்ப ஏழ்மை காரணமாக ரோஜாக்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறாள் மரியா. சகோதரிக்கு குழந்தை பிறந்ததும் அவளை விட்டு விட்டு ஒடி விட்டான் அவளது கணவன். குடும்பச்சுமை முழுவதும் மரியா மீது விழுகிறது.



பதின்ம வயதினளானதால் மரியாவிற்கு ஒரு காதலனும் உண்டு. அவனுடன் நெருங்கியும் பழக ஆரம்பிக்க கர்பவதியாகிறாள். அதனால் வேலையில் சரியாக ஈடுபட முடியவில்லை. முதலாளியிடம் கோவித்து கொண்டு வேலையை விட்டு விடுகிறாள்.



அம்மாவிற்கும் அக்காவிற்கும் மரியா மீது அளவற்ற கோபம். வீட்டு சூழ்நிலையை புரிந்து கொள்ளவில்லை என்று திட்டி தீர்க்கிறார்கள். தன் காதலையும் கர்ப்பத்தையும் சொல்ல முடியாது தவிக்கிறாள் மரியா. வேறு வேலைக்கு எவ்வளவோ முயற்சி செய்தும் எதுவும் கிடைத்தபாடில்லை. காதலனோ பயந்து போகிறான். அவளை திருமணம் செய்யவும் தயங்குகிறான். காதலனுடன் சண்டையிட்டு பிரிந்தும் விடுகிறாள்.



செய்வதறியாது தவிக்கும் வேளையில் காதலனின் நண்பன் ஒருவன் ஒரு வேலை இருப்பதாகவும் ஆனால் அதற்கு நல்ல பணம் கிடைக்கும் என்று கூறுகிறான். சரி என்கிறாள். ஆனால் போதை மருந்தை அமெரிக்காவிற்கு கடத்தும் படு பயங்கரமான வேலை என்று முதலில் அறியாது அப்பாவியாக ஒப்பு கொள்கிறாள் மரியா. அதுவும் எப்படி..? பவுடர்களை ரப்பரில் அடைத்த மாத்திரைகளாக முழுங்க வேண்டும் என்பதே ஏற்பாடு. அதிக ரிஸ்கானதும் கொஞ்சம் தவறினால் உயிருக்கே உலையாகும் என்று அறிந்ததும் முதலில் சற்று பயந்தும் குழம்பியும் போகிறாள்.



குடும்பத்தில் வறுமை..வேலை இல்லை..காதலில் தோல்வி..திருமணமாகவில்லை.. வயிற்றில் குழந்தை.. இவைகளை விட ஒரு பெண்ணுக்கு வேறு என்ன கொடுமைகள் வேண்டும்...???



எந்த ரிஸ்க்கும் எடுக்க தயாராகிவிட்டாள் மரியா.



பெரிய திராட்சை பழங்களை பல்லில் படாமல் விழுங்கும்படி ரோஸி என்ற பெண் மரியாவிற்கு பயிற்சி அளிக்கிறாள். ரோஸி பல முறை போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவள். அவளது சகோதரி அமெரிக்காவில் வசிப்பவள். அவளை காணும் ஆசையில் ஒரு முறை செல்ல முயற்சி செய்து பின் தன் குற்ற உணர்சியால் சகோதரியை காணாமலே பல முறை சென்றும் வந்து விட்டவள்.



மரியாவுடன் ரோஜா ஏற்றுமதி கம்பெனியில் வேலை பார்த்த பிளான்கா {Blanca} என்ற பெண்ணும் இதே தொழிலில் இறங்க முடிவெடுத்து மரியாவுடன் பயணமாக நினைக்கி. மரியாவிற்கு அவள் வருவது மிகவும் ஆபத்தானது என்று எவ்வளவோ எடுத்து கூறுகிறாள். ஆனால் பிளான்காவோ பணத்திற்கு ஆசைப்பட்டு வந்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறாள்.



மரியா இந்த போதை கடத்தலில் அமெரிக்காவின் விமான நிலையத்தில் பிடிபட்டாளா? அவளுடன் கூட வந்த பெண்களுக்கு ஏற்பட்ட நிலை என்ன..? வாழ்வா சாவா என்பதே சொல்ல முடியாத சோகங்களுடன் கூடிய சன்பென்ஸ் நிறைந்த மீதிக்கதை.



விசா, டிக்கெட், தங்குமிடம், பார்க்க வேண்டிய நபர்கள், செய்ய வேண்டிய விஷயங்கள் அனைத்தும் ரெடி என்று ஆர்டர் வருகிறது.



அமெரிக்காவில் காரியதரிசி வேலை கிடைத்து விட்டதாக வீட்டில் கூறி விட்டு 62 மாத்திரைகளை விழுங்கிய படி முதன் முறையாக அமெரிக்காவிற்கு பயணமாகிறாள் மரியா. அவளுக்கு பயிற்சி அளித்த ரோஸியுடனும் பிளான்காவுடனும் விமானத்தில் தயங்கியபடியே பயணமாகிறாள். இவர்கள் மூவர் தவிர இன்னொரு பெண்ணும் அதே விமானத்தில் வருவதாக மரியாவிடம் கூறுகிறாள் பிளான்கா.



விமானத்தில் ரோஸிக்கு உடல் நிலை பாதிக்க படுகிறது. படபடப்பும் அதிகமாகிறது.ஆனால் ஒருவரோடு ஒருவர் பேசி கொள்ள முடியாமல் மூவரும் தவித்து போகின்றனர். இந்த படபடப்பில் தங்க வேண்டிய ஹோட்டலின் முகவரியை தொலைத்து விடுகிறாள் மரியா. ரோஸி ஆவணங்களில் தன் சகோதரியின் முகவரியை குறிப்பிடும் படி கூற விசா பேப்பர்களை மரியா சமர்பிக்கிறாள்.



விமானம் அமெரிக்காவை அடைந்தும் விடுகிறது.விமான நிலையத்தில் அவரவர் பெட்டிகளுக்காக காத்திருக்கும் வேளையில்..



மரியாவை மட்டும் தனியாக இடை மறித்து பெண் காவலர் துணையுடன் ஒரு தனி அறைக்கு அழைத்து செல்கிறார் உயர் போலிஸ் அதிகாரி....



அழைத்து செல்லப்பட்ட மரியாவை பெண் போலிஸ் பரிசோதிக்கிறார். அமெரிக்காவிற்குள் போதை மருந்துகளை கடத்தி வருவது மிகப்பெரிய குற்றம் என்றும் உடலில் ஏதேனும் கடத்தி வந்திருக்கிறாயா..? என்றும் கேள்வி கேட்கிறார்.எதுவும் இல்லை என்று அழுத்தமாக மறுக்கிறாள் மரியா. ஆனால் அவர்களுக்கோ சந்தேகம் தீர்ந்தபாடில்லை.



மரியாவை எக்ஸ்ரே பரிசோதனைக்குள்ளாக்க முடிவு செய்து அவளிடம் ஒப்புதலும் வாங்குகின்றனர். ஆனால் மரியா கர்ப்பமுற்றிருப்பதாக அறிந்ததும் எக்ஸ்ரே பரிசோதனை செய்ய இயலாது என்று கூறி அவளை விடுவிக்கின்றனர். ஆனால் மரியா, ரோஸி, பிளான்கா தவிர விமானத்தில் பயணித்த மற்றொரு பெண் போலிஸில் மாட்டி கொள்கிறாள். அவளை விலங்கிட்டு அழைத்து சென்று விடுகின்றனர். மரியாவை விடுவிதத்து குறித்து அவளுக்கு மகிழ்ச்சி என்றாலும் அந்த பெண்ணை கைவிலங்கிட்டு அழைத்து சென்றது மரியாவை சற்று உலுக்கிவிடுகிறது. பயமும் அதிர்ச்சியும் இருந்தாலும் எதையும் காட்டி கொள்ளாதவளாய் விமான நிலையத்தை விட்டு வெளியேறுகிறாள்.



மரியா, ரோஸி, மற்றும் பிளான்காவிற்காக காத்திருந்த கடத்தல்காரர்கள் இருவர் விமான நிலையத்தில் இருந்து அவர்களை வேகமாக அழைத்து செல்கின்றனர். ரோஸி வயிற்று வலியால் துடிக்கிறாள். மூவரையும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கின்றனர். மரியா, பிளான்காவின் உடல்களிலிருந்து கழிவு மூலம் போதை பொருட்கள் அடைக்கப்பட்ட மாத்திரைகள் எடுக்கப்ப்டுகிறது. ரோஸிக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று மரியா கடத்தல் காரர்களிடம் முறையிடுகிறாள். அவர்கள் எதையும் சட்டை செய்யாமல் அவளை தூங்கும்படி நிர்பந்திக்கின்றனர்.



களைப்பிலும் பயத்திலும் உறங்கி போகிறாள் மரியா. நடுஇரவில் கண் விழித்து பார்க்கையில் ரோஸியை கடத்தல் காரர்கள் தூக்கி செல்கின்றனர். ரோஸி இறந்து விட்டிருக்கலாம் என்று மரியா அஞ்சுகிறாள். தங்களையும் கொலை செய்து விடுவார்களோ என்று பயந்து போய் மரியாவும் பிளான்காவும் போதை மாத்திரைகளை அள்ளி பையில் போட்டபடி ஓட துவங்குகின்றனர்.



எப்படியோ இருவரும் சேர்ந்து ரோஸியின் சகோதரியின் வீட்டையும் கண்டு பிடிக்கின்றனர். பிளான்கா மரியா செய்தது தவறு என்று சண்டையிடுகிறாள். கடத்தலுக்கு உண்டான பணத்தை கூட பெறாமல் வந்து விட்டோமே என்று கடிந்து கொள்கிறாள். ரோஸியின் சகோதரி வீட்டிற்கும் வர மறுக்கிறாள். உன்னால் தொந்தரவு தான் என்று பிளான்காவை நொந்து விட்டு மரியா மட்டும் ரோஸியின் சகோதரி வீட்டிற்கு சென்று அறிமுகம் செய்து கொள்கிறாள்.



தான் வேலை தேடி அமெரிக்கா வந்ததாகவும் ரோஸிதான் அவளை அனுப்பி வைத்ததாகவும் கூறுகிறாள். தன் தங்கை மீதுள்ள் பாசத்தால் மரியாவிற்கு வேலை ஏற்பாடு செய்வதாகவும் அதுவரை இங்கேயே தங்கி கொள்ளலாம் என்று ரோஸியின் சகோதரியும் அவளது கணவனும் கூறவே மரியா அவர்களுடன் தங்குகிறாள். தனியே செய்வதறியாது தவித்த பிளான்காவும் பின்னர் அங்கேயே அடைக்கலமாகிறாள்.




இருவருக்கும் வேலை ஏற்பாடு செய்வதாய் சொன்ன ரோஸியின் சகோதரி அவர்களை வேலை வாங்கி தரும் ஏஜெண்டிடம் அழைத்து சென்று விட்டு விட்டு சென்று விடுகிறாள். பிளான்காவின் பையிலிருந்த போதை மருந்துகளை அவன் கவனித்து விடுகிறான். அது தவிர நகரில் நடந்த ஒரு முக்கியமான செய்தியையும் சொல்கிறார். போதை மருந்துகளை வயிற்றில் சுமந்து வந்த ஒரு பெண் இறந்து விட்டதாகவும் அவளின் வயிற்றை கிழித்து போதை மருந்துகளை எடுத்து கொண்டு அவளது பிணம் வீச்ப்பட்டதாகவும் தெரிவிக்கவே இருவரும் சில நிமிடம் உறைந்து போகின்றனர்.



ஏஜெண்ட் சந்தேகத்தின் பேரில் இருவரிடமும் கேள்விகள் கேட்கவே அங்கிருந்து வெளியேறுகின்றனர். கடத்தல் காரர்களுக்கு போன் செய்து ரோஸியை பற்றி விசாரிக்கின்றனர். அது மட்டுமில்லாது தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்தால் போதை மருந்துகளை ஒப்ப்படைப்பதாகவும் கூறவே சில நிமிடங்களில் பணத்துடன் வந்து சேர்கின்றனர் கடத்தல்காரர்கள்.



அவர்களிடம் போதை மருந்துகளை கொடுத்து சண்டையிட்டு பணத்தை பெறுகின்றனர் மரியாவும் பிளான்காவும். ரோஸியை பற்றி விசாரிக்கவே அவள் இறந்து விட்டாள் என்று அசட்டையாக சொல்லி விட்டு செல்லவே மீண்டும் ஏஜெண்டிடம் ஒடிப்போய் அனைத்து விபரங்களையும் சொல்கின்றனர். அவர் பதைத்து போகிறார். இருவருக்கும் ஏதாவது வேலை வாங்கி தருவதாக கூறி இந்த விஷயமெல்லாம் ரோஸியின் சகோதரிக்கு தெரியுமா என்று கேட்கவே இருவரும் மவுனமாகின்றனர்.



மரியாவிற்கு உடல் நிலை பாதிக்கிறது. தனியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கிறாள். அவள் குழந்தை ஒரளவு வளந்து விட்டதால் வாராவாரம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சீட்டு எழுதி கொடுக்கிறார் மருத்துவர். ஸ்கேன் செய்த குழந்தையின் படத்தையும் அளிக்கிறாள். நீண்ட நாள் கழித்து அனைத்து துயரங்களையும் மறந்தவளாய் புன் முறுவல் பூக்கிறாள் மரியா.



வீட்டை அடைந்ததும் ரோஸியின் சகோதரியிடம் நடந்தவற்றை சொல்ல நேரம் கிடைக்காது தவிக்கிறாள் மரியா. அதற்குள் ஏஜெண்ட் போன் செய்து அனைத்து விபரங்களையும் தெரிவிக்கவே இருவரையும் அடித்து துரத்தாதக் குறையாய் வீட்டை விட்டு வெளியேற சொல்கிறாள் ரோஸியின் சகோதரி. வாழ்க்கையே வெறுத்து போனவர்களாய் இருவரும் வெளியேறுகின்றனர். மீண்டும் திரும்ப ஊர் போய் சேரலாம் என்றும் முடிவெடுத்து டிக்கெட்டும் பதிவு செய்கின்றனர்.



ரோஸியின் உடல் அவளது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டது அறிந்து அவளுக்கு இறுதி மரியாதை செய்ய வருகிறாள் மரியா. அவளது உடலை காண முடியாது அழுகையும் துக்கமும் மரியாவை வாட்டி எடுக்கிறது. ரோஸியின் சகோதரியிடம் சிறிது பணத்தை அளித்து விட்டு விடை பெற்று செல்கிறாள் மரியா.



மரியாவும் பிளான்காவும் விமான நிலையம் அடைகின்றனர். போகிற வழி முழுவதும் தன் கருவில் உள்ள குழந்தையின் ஸ்கேன் செய்த படத்தை பார்த்தபடியே செல்கிறாள் மரியா. தன் குடும்ப நிலை குறித்த வருத்தங்களும் பிறக்க போகும் குழந்தை குறித்த சந்தோஷங்களும் அவளின் மனதில் நிழலாடுகின்றன.



டிக்கெட் பரிசோதனைகள் முடிந்து விமானத்திற்குள் ஏற முற்படுகையில் பிளான்கா முதலில் செல்ல மரியா பின் நோக்கி நகர்ந்து விமானை நிலையத்தை விட்டு வெளியே செல்லுவதாய் நடக்க காட்சிகள் உறைந்து திரைப்படம் முடிகிறது.திரைப்படம் முடிந்ததும் ஏதோ இனம் புரியாத ஒரு சோகம் நம்மையும் ஆட்டுவிக்கிறது.



மரியாவாக நடித்திருப்பது Catalina Sandino Moreno. இவரது அழகையும் இயல்பான நடிப்பையும் பாராட்ட வார்த்தைகளில்லை.




கொலம்பியாவில் பிறந்த இவர் விளம்பர துறையை விருப்ப பாடமாக பயின்று பின்னர் நடிப்பின் மீது ஏற்பட்ட காதலால் நியூயார்க் நகரத்துக்கு இடம் பெயர்ந்தவர். 2004ல் இந்த திரைப்படதிற்காக இயக்குநர் பல புது முகங்களை தேடிய போது 900க்கும் மேற்பட்ட புது முகங்களில் முதலாவதாக தேர்வு பெற்றவர். இயக்குநரின் தேர்வு எவ்வளவு சிறந்தது என்று இத்திரைப்படம் பார்த்ததும் அறிய முடிகிறது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.



இந்த அருமையான திரைப்படத்தின் இயக்குநர் Joshua Marston. அமெரிக்காவில் பிறந்து சிகாகோ பல்கலைகழகத்தில் அரசியல் வரலாறு பட்டபடிப்பு படித்து பத்திரிகை நிருபராக வாழ்க்கையை துவங்கியவர். இவரும் சினிமாவின் மீது ஏற்பட்ட அதீத காதலால் மீண்டும் கலை இலக்கியம் பயின்று சிறந்த திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று உறுதியுடன் முயன்று இந்த திரைப்படத்தை எழுதியும் இயக்கியும் வெற்றி பெற்றுள்ளார்.




2004ல் உருவான இந்த ஸ்பானிஷ் திரைப்படம் HBO நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த திரைப்படத்திற்கான திரைக்கதையை உருவாக பல போதை மருந்து கடத்தல் குற்றவாளிகளிடம் பேசி அவர்களது அனுபவங்களை அறிந்து கொண்டு இயக்கியுள்ளார்.




வாழ்க்கையின் கன பரிமாணத்தை அதன் அழுத்தம் குறையாமல் சுவாரசியமாகவும் எளிமையாகவும் படைத்திருப்பது ஒரு அதி உன்னத அனுபவமாய் அமைந்த திரைப்படம். மரியாவின் ஆசைகளும் நிராசைகளும் ஏக்கமும் சந்தோஷங்களும் துக்கமும் ஒரு அற்புத பாத்திர படைப்பாய் மிளிர்கிறது.




பெர்லின், சூடான் என்று பல உலக திரைப்பட விழாக்களில் பரிசை அள்ளியதுடன் 30க்கும் மேற்பட்ட உலக விருதுகளை வாரி குவித்துள்ளது.



உலக சினிமா விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.



சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.



உடனே பார்க்க டிரைலர் இங்கே



 

©2009 butterfly Surya | by TNB