தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக்கும் கொடுமை.
நமக்கெல்லாம் துவக்கப்பள்ளி பருவத்தில் கோடை விடுமுறை விட்டால் எங்கே போவோம்... ?? உறவினர் வீட்டிற்கு அல்லது பாட்டி வீட்டிற்கு சென்று குதித்து கும்மாளமிடுவோம்.
அதேபோல் பள்ளியின் இறுதி நாளன்று துள்ளி குதித்து வீடு வந்து சேருகிறான் மாசோவ். தனக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு கால்பந்தை தூக்கி கொண்டு மைதானத்தை நோக்கி ஒடுகிறான். ஆனால் பயிற்ச்சியாளரோ விடுமுறையில் பயிற்சி கிடையாதென்றும் எங்காவது சென்று விடுமுறையை கழிக்குமாறு சொல்லி விட்டு கிளம்புகிறார். விளையாட யார் துணையுமின்றி தன்னந்தனியே நிற்கிறான் மாசோவ்.
சோகமே உருவாகி வீட்டினுள் அடைந்து கிடக்கிறான். பாட்டி வேலை முடித்து வந்ததும் எங்கே போவது என்று கேட்கிறான். பாட்டியும் உன் தந்தை இறந்து விட்டார்,தாயும் தொலை தூரத்தில் உனக்காக கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறாள், உன்னை எங்கேயும் கூட்டிப்போக யாரும் இல்லை என்கிறாள்.
மனமுடைந்து போகிறான் மாசோவ். மறு நாள் பாட்டி வேலைக்கு கிளம்பியதும் சிறிது பணத்தையும், தாயின் போட்டோக்களையும் முகவரியையும் எடுத்து கொண்டு தனியே கிளம்புகிறான்.
மாசோவ் தனது தாயை தேடிக்கண்டுபிடிக்க தயாராகிறான். வழியில் உறவினரான ஒரு தம்பதியினரை சந்திகிறான். அவர்களும் அவனிடம் இதமாக பேசி அவன் பயணத்தை அறிந்து கொண்டு அந்த பெண்மணி தனது கணவரையும் அனுப்பி வைக்கிறாள். அவர் பெயர் கிகுஜிரோ. கிகுஜிரோவோ சற்று போக்கிரி என்றும் மறை கழண்டு போனவர் என்றும் அனைவராலும் பாராட்டப்படுபவர்.
வேறும் யாரும் இல்லாத நிலையில் மாசோவும் கிகுஜிரோவின் துணையோடு எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் தாயை கண்டுபிடிக்க பயணமாகிறான். இந்த நீண்ட பயணத்தில் இருவருக்குள்ளும் இது நாள் வரை ஒளிந்துகிடந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதே இந்த ஜப்பானிய திரைப்படம்.
ஆரம்பத்திலேயே பணம் முழுவதையும் சைக்கிள் பந்தயத்தில் இழந்து விட்டு கையில் சல்லி காசில்லாமல் பயணத்தை தொடங்குகின்றனர் இருவரும்.
இந்த பயணத்தில் மகிழ்ச்சி, இன்பம், விளையாட்டு, நகைச்சுவை, சிறு சிறு ஆனந்தம், நடுநடுவே ஏமாற்றம் என ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் அதே நேரத்தில் சுவாரசியமாக கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர்.
நீண்ட பயணத்திற்கு பிறகு விலாசத்தை அடைகின்றனர். வீட்டை நோக்கி நடக்கிறார் கிகுஜிரோ. அதிர்ச்சியாக அந்த விலாசத்திலுள்ள அம்மாவிற்கு வேறோரு குடும்பம் உள்ளது. இதை எப்படி அவன் ஜீரணிக்கப்போகிறான் என்று அவர் தவிக்கும் போது மாசோ அழுது கொண்டு இருக்கிறான்.
உண்மை நிலை அறிந்தால் அவன் துடித்து போவான் என்று நினைத்து அந்த விலாசத்தில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்று சொல்லி சமாளிக்கிறார் கிகுஜிரோ. மாசோவின் அழுகை நின்றபாடில்லை. அவனை எப்படியாவது தேற்ற எண்ணி ஒரு பொம்மை மணியை கொடுத்து உங்கம்மா நீ வந்தா உன்கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்துட்டு போயிருக்காங்க.. உனக்கு கவலை வந்தால் இந்த மணியை அடித்தால் தேவதை வந்து உனக்கு உதவும் என்று சொல்லி ஒரு வழியாக அவனை தேற்றுகிறார்.
மீண்டும் ஊருக்கு செல்ல ஆயத்தமாகி நட்க்க தொடங்குகிறார்கள். வழியில் அந்த பிஞ்சு மனதின் ஏமாற்றத்தை எண்ணி மாசோவை மகிழவைக்க பல உத்திகளை கையாள்கிறார். பெரிய இலைகளை வெயிலுக்கு குடையாக சட்டையில் சொருகியபடி நடப்பதும், சோளத்தோட்டத்தில் புகுந்து சோளங்களை உண்டு பசியாறுவதும் ஊர் சுற்றி திரியும் எழுத்தாளரை சந்திப்பதும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான காட்சிகள்.
வரும் போது சந்தித்த பல வித மனிதர்களை மீண்டும் திரும்பி செல்லும் போது ஏதேச்சையாக சந்திப்பதும் அனைவரும் அவர்களுக்கு உதவுவதும் ஜப்பானின் ஒரு சாராரது வாழ்க்கை முறையை சமூகப் பார்வையுடன் பதிவு செய்துள்ளார் இயக்குநரும் கிகுஜிரோகவாக நடித்தவருமான டகேஷி கிட்டானோ.
குழந்தைகளின் தனிமை உலகத்தையும் நகர வாழ்க்கையில் அவர்கள் தொலைத்த கேளிக்கை விளையாட்டுகளையும் ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை தெளிவாக பதிய வைத்த ஒரு மிகச்சிறந்த திரைப்படம். என்னதான் நகைச்சுவையுடன் பதிய வைத்தாலும் அதுனுள் இழையோடியிருக்கும் சோகம் நம்மை கலங்க வைக்கிறது.
ஒவ்வொர் காட்சியும் குழந்தைக் கதைகளில் வருவது போல் ஒரு சிறு தலைப்புடன் தொடங்குவது புதுமையானதும் தனித்துவம் வாய்ந்ததாகும். குளோசப் ஷாட்டுகளை போன்றே லாங் ஷாட்டுகளிலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தி அசர வைக்கிறார் இயக்குநர்.
இறுதி காட்சிகளில் வசனங்கள் பேசாது இசையின் மூலமே படத்தை பேசவைப்பது அத்தனை அருமை.
ஒரு சிறுவனுக்கும் இரண்டாவது பாலக மனதில் இருக்கும் வயோதிகருக்கும் இடையேயான நட்பையும் ஆழ்ந்த அன்பையும் இதைவிட ஆழமாக சொல்ல இயலுமா..?? தெரியவில்லை..
உடனே பார்க்க டிரைலர் இங்கே
1999ல் வெளியாகி கேன்ஸ் உலக திரப்ப்பட விழாவில் தங்கப்பனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன் உலக அரங்கில் பல விருதுகளை வாரிக் குவித்த திரைப்படம். சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய அதிஉன்னத திரைப்படம்.
டிஸ்கி: சென்ற வருடம் எழுதிய பதிவின் மீள்பதிவு.
நேற்று நந்தலாலா பார்த்தேன். கிகுஜிரோ பார்க்காதவர்கள் கண்டிப்பாக “நந்தலாலா” பாருங்கள். நேரம் கிடைப்பின் பதிவிடுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
நல்லா இருக்கு! நான் பார்க்க வேணும்! :-)
நந்தலாலா இங்கிருந்துதான் வந்தது என்று அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்... இசையால் நிறைந்த இறுதிக்காட்சியிலும் மாற்றமில்லை.
அருமையான விமர்சனம்... இருந்தும் நந்தலாலா ஜெயித்துள்ளது என்பதே உண்மை.
அதை பார்க்காமல் இதை பார்த்திட்டீங்க.
பகிர்வுக்கு நன்றி
சூர்யா,
அவசியம் இதையும் பார்க்கிறேன். நீண்ட நாளுக்கு பின்னர் தமிழில் தரமான திரைப்படம் கிடைத்தற்கு பெருமைப்படுவதா? அல்லது அந்த படம் இதன் தழுவல் என்று வழக்கம்போல் ஒதுக்குவதா என மிகவும் குழப்பம்,
மிஷ்கின் ஏனையோர் போல மூலத்தை பாழாக்காமல் அழகுக்கு அழகு சேர்த்துள்ளார்,என்றும் நிறைய படித்தேன். விரைவில் பார்த்துவிட்டு என் பாதிப்பை எழுதுவேன்.சாருவின் உயிர்மை விமர்சனத்துக்கு வெயிட்டிங்க்.
நந்தலாலா விமர்சனத்தை எழுதி, ஒரு ஒப்பீடு செய்து இருக்கலாமே!
நல்லவேளை இந்த படத்தை நான் பார்க்கலை.. பார்த்து இருந்தா நான் நந்தலாலா பார்த்து இருக்க மாட்டேன்.
பார்க்கக் கிடைக்கவில்லை. நல்ல விமரிசனம். என் முகப் புத்தகத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
ஜி பார்த்துடறேன்.!:)
நந்தலாலா பார்த்து விட்டு இந்தப்படம் பார்ப்பேன் ...என்ன இருந்தாலும் ஒரு வித்தியாசமான தமிழ் சினிமா நந்தலாலா அந்த உணர்வை முழுசாக அனுபவிக்க விரும்புகிறேன்! :-)
அருமையான பதிவு. உங்கள் எழுத்து நடை அருமை. நந்தலாலா எடுத்த மிஷ்கின் உண்மையைச் சொல்லிவிட்டு எடுத்திருக்கலாம். இருந்தாலும், எத்தனையோ படங்கள் இருக்க. ரீமேக் செய்ய, இந்தப் படத்தை தேர்ந்தெடுத்த மிஷ்கினுக்கு வாழ்த்துச் சொல்லுவோம்.
நல்ல நடை, அழகான விமர்சனம், கதாப்பாத்திரங்களை கண் முன் நிறுத்துகிறது.
படம் பார்க்க ஆவலாய் உள்ளது. "நந்தலாலா" பார்க்கவேண்டும்.
நன்றி சிறந்த இப்பதிவை இட்டதற்கு.
கிடைத்தால் பார்க்கவேண்டும்.
எப்படியோ தமிழுக்கு பிற மொழிகளிலிருந்து நல்ல படைப்புகளை கொண்டு வருகிறார்களே என்றே பார்க்க வேண்டும்.
அரபி, ஆங்கிலப் பாடல்களை தழுவும் தமிழ் இசையமைப்பாளர்களை நான் ஒதுக்க மாட்டேன். நல்ல இசையை நாம் அறிய தருவதனால் மகிழ்ச்சியே
\\கிகுஜிரோ பார்க்காதவர்கள் கண்டிப்பாக “நந்தலாலா” பாருங்கள்.// அப்படீன்னா என்ன சொல்ல வரீங்ணா? அதே படத்தைதான் எடுத்திருக்காரா?
\\நந்தலாலா விமர்சனத்தை எழுதி, ஒரு ஒப்பீடு செய்து இருக்கலாமே!// சித்ராவை நான் வழிமொழிகிறேன்.
நான் கிக்கிஜிரோ வை தான் முதலில் பார்த்தேன். கதை, திரைக்கதை இவற்றை தாண்டி அந்த படைப்பு என்னை வெகுவாக ஈர்த்தது. மிகவும் லயித்து பார்த்தேன். மொத்த படமும் மிக மிக அழகாக தெரிந்தது எனக்கு. அதன் பின் நந்தலாலாவை பார்க்க எனக்கு அரவம் தூண்டவில்லை. ஆர்வம் இல்லை என்பதை விட, நான் பார்த்து பார்த்து ரசித்த இந்த படத்தின் அழகை நந்தலாலா பாதித்து விடுமோ என்ற பயம்தான். இருபினும் பார்ப்பேன். இளையராஜாவுக்காக.
படம் பார்த்த உணர்வைத்தந்த விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்.
பட்டர்பிளை சூர்யா என்ற அழகான பெயர் பர்த்து பின்தொடர்கிறேன்.வாழ்த்துக்கள்.
இப்படம் 80களில் வெளிவந்த ஒரு ஃப்ரஞ்சுப் படம் போன்றுள்ளது. படத்தின் பெயர் நினைவில்லை. அதன் கதை இப்படியிருக்கும். அழகான குடும்பம். ஒரு விபத்தில் கணவன், மனைவி, குழந்தை மூவரும் பிரிந்துவிடுகின்றனர். குழந்தை எங்கோ ஒரு சேரியில் வளர்கின்றான். மனைவிக்கு வேறொரு கணவன், குடும்பம் என நல்ல வாழ்க்கை அமைகின்றது. ஒரு சூழ்நிலையில் தன் முன்னால் மகனைத் தேடிக் கண்டுபிடிக்கின்றாள். அவன் சேரியில் வளர்வதைக் கண்டு தன்னுடன் அழைத்துவந்தால் தனது இன்றைய வாழ்வு பாதிக்கப்படுமோ என எண்ணி இவன் என் குழந்தை இல்லை எனச் சொல்லிவிட்டு வந்துவிடுகின்றாள். மகன் எப்பொழுதும் போல் தன் சேரி நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கின்றான். மனதினைப் பிழிய வைத்த படம். பெயர் நினைவில்லை.
ஆஹா படிக்கும்போதே சட்டுனு தெரிந்துவிட்டது....
இது நந்தலாலாவின் மூலக்கரு என்று....
சட்டுனு எனக்கு தமிழ்ல வந்த படம் பேர் நினைவில் வராததால் அடடா அப்டின்னு யோசிச்சுக்கிட்டே வரும்போது கடைசி வரில நீங்களே கொடுத்துட்டீங்க படத்தின் பெயரை....
நிஜம்மாவே மிக அருமையான படம் நந்தலாலா...
அந்த படத்தில் நடித்த ஒவ்வொருவரும் பாத்திரத்துடன் பொருந்தி பாங்காக நடித்தனர்.. ஹூஹூம் வாழ்ந்தனர் என்று சொல்லலாம்...
அத்தனை சிறப்பு படம்...
கண்டிப்பா இந்த படமும் பார்க்கனும்பா...
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு சூர்யா...
கொஞ்ச நாட்கள் ..சாரி வருஷம் முன்னே பார்த்தது... நினைவுபடுத்தியதுக்கு நன்றி...நல்ல படம்..நல்லதொரு அலசல்..
உங்கள் விமர்சனம், அந்த படத்தை பார்க்க தூண்டுகிறது சார்.. நன்றி
அழகான விமர்சனம்.. எழுத்து நடை பதிவை முழுவதுமாக படிக்க வைத்தது.. பாராட்டுகள் பல !!!
எனது வலையில் இன்று:
தமிழ்நாடு உருவான வரலாறு
தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
நல்ல விமர்சனம்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
சுருக்கென்ற விமர்சனம் .... ஒப்பீட்டுப் பார்வை.. எளிய மொழி நடை... அருமை.... வாழ்த்துகள்...
எனது வலைப்பதிவுக்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றி....
Post a Comment