Showing posts with label Majid Majidi. Show all posts
Showing posts with label Majid Majidi. Show all posts

சில்ரன் ஆஃப் ஹெவன் இயக்குநர் மஜித் மஜிதி



சினிமா என்றாலே நாலு பாட்டு ஐஞ்சு ஃபைட்டு என்று நம்பிக்கொண்டிருக்கிறான் தமிழ் ரசிகன். விஜய், அஜித், நமீதா, நயன்தாரா தாண்டி அவன் சிந்திப்பதே இல்லை.


ஆனால், இதையெல்லாம் தாண்டி உலக சினிமா என்கிற ஒன்று இருக்கிறது. அது என்ன உலக சினிமா..? ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், (அப்படி சொன்னால் நம்ம கமலுக்கு கோவம் வரும். வேறு என்ன சொல்ல..?) ஏன் டோலிவுட் கூட இருக்கிறது. ஆனால், எந்தத் திரைப்படமும் உலக தரம் என்கிற அளவுகோலை வைத்துக்கொண்டு எடுக்கப்படுவதில்லை.


திரைப்படம் உருவாக்கும் கதைகள், சூழல், பாத்திரங்கள், நடிப்பு முதலியவற்றால் மட்டுமே அது உலகத் தரத்தை அடைகிறது. சுருங்கச சொன்னால், உலக மக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கும்படியும் பாராட்டும்படியும் அமைந்தால் அது உலக சினிமா ஆகிறது.


உலக சினிமாவில், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் பெற்ற வெற்றிகளிலேயே மிகவும் பிரபலமானது ஈரானிய திரைப்படங்கள்தான். கடுமையான தணிக்கை முறைக்கு பிறகு வெளிவரும் சூழலில், இது எப்படி சாத்தியமாகிறது?


வாழ்வை மிக நெருக்கமாக காட்டுவதாலும் அதன் அசல் (அஜித்தின் அசல் அல்ல) தன்மையோடு பேசுவதாலும், ஹீரோ வில்லன் என்கிற எத்தகைய லோக்கல் பார்முலாக்களும் இல்லாது காதல், நேசம், அன்பு, பாசம் அனைத்தையம் யாதார்த்தமாக சித்தரிப்பதால் இது சாத்தியப்படுகிறது. அது மட்டுமல்லாது பாரசீக மஸ்னவி, கஜல் போன்ற இசை மரபின் வழமையிலும் திரைப்படங்கள் வெளியாகி ஒரு கவிதையாய் மலர்ந்து மகிழ்ச்சியூட்டுகின்றன.


அப்படி உலகத் தரத்தில் தனது படைப்புகளை அளிப்பவர்தான் ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி. 1959, ஏப்ரல் 17-ல் இரானில் பிறந்து வறுமையில் வாடியவர். 12 வயதில் தெருதெருவாக இனிப்பு மற்றும் ஜஸ் விற்றும் பள்ளிப் படிப்பை மேற்கொள்ள முடியாமல் பிறகு டெஹ்ரானில் உள்ள நாடக கல்லூரியில் சேர்ந்தார்.


1978,- 79-ல் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டார். சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். என்றாலும் இயக்குநராக வேண்டும் என்பதே இவரது பேரார்வமாக இருந்தது.


1992-ல் தனது முதல் திரைப்படமான Badak-ஐ திரைக்கதை எழுதி இயக்கினார்.




1996-ல் வெளிவந்தது Pedar(Father). நாம் எல்லோரும் நம் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் வாழும் இந்த வேளையில் எத்துனையோ பேர் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் இல்லாத அல்லது இழந்துவிட்ட தங்களின் உறவுக்காக ஏங்கிக்கொண்டுதான் இருப்பார்கள். அப்படி தந்தையின் பிரிவால் துடிக்கும் ஒரு சிறுவனின் கதைதான் இந்தத் திரைப்படம்.




'Children of Heaven' பல்வேறு உலகத் திரைப்பட அரங்கில் விருதுகளை வாரிக்குவித்த படம். கோயிலில் அல்லது திருமண மண்டபத்தில் தொலைத்துவிடுவோமோ என்று நாம் கழற்ற யோசிக்கும் ஒரு 'காலணி(ஷூ)'தான் திரைப்படத்தின் கதாநாயகன். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த இப்படம், அண்ணன் தங்கையான ஒரு சிறுவனையும், சிறுமியையும் பற்றிக் கூறுகிறது. குழந்தைகள் ஒரு விஷயத்தை எத்தனை நேர்மையாக, அதே நேரம் எவ்வளவு தீவிரத்துடன் அணுகிறார்கள் என்பதை கலையமைதி கெடாமல் சொல்கிறது. 1997-ம் வருடம் 'மான்டர் உலகத் திரைப்பட விழா'வில் நான்கு விருதுகளைப் பெற்றதுடன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இரானிய திரைப்படமும் இதுவே.






1999-ல் வெளிவந்த The Colour of Paradise திரைப்படம், அப்பாவின் இரண்டாவது திருமண ஆசையால் அலைக்கழிக்கப்படும் பார்வையற்ற சிறுவன் மொஹமதுவைப் பற்றியது. இந்தப் படத்தில் மகன் கண் பார்வையில்லாதது ஒரு ஊனமென்றால், தந்தையும் மன ஊனம் கொண்டவர் என்பதை சொல்லாமல் சொல்கிறார் இயக்குநர். இதுவும் பல விருதுகளை பெற்றது. அந்த ஆண்டு வெளிவந்த பத்துத் திரைப்படங்களில் சிறந்த ஒன்றாக டைம் பத்திரிகை இப்படத்தை தேர்வு செய்திருந்தது.





Baran (Rain) என்கிற படம் 2001-ம் ஆண்டு வெளியானது. இது பதின்ம வயதில் இருக்கும் லத்தீப் என்கிற இளைஞனின் கதை. அகதியாக இருக்கும் குடும்பதிலிருந்து வறுமை காரணமாக ஆண் வேடமிட்டு வரும் பாரன் என்ற பெண்ணை சந்திக்கிறான். அவனுடைய காதல், மழைபோல அந்த வாலிபனின் மனதில் பெய்துவிட்டு செல்வதாக அற்புதமாகக் காட்டியிருப்பார் மஜித் மஜிதி. அந்த இளம் பெண்ணின் முகத்தை திரைப்படம் முடியும்வரை காட்டாமல் அவள் விட்டுச் சென்ற காலடிச் சுவட்டை மழை நனைப்பதோடு படம் நிறைவடைகிறது. ஸ்கீரின் சர்வதேச விருதுடன் 13 உலக விருதுகளை வென்றது இப்படம்.






The Willow Tree (2005) ஒரு கண் பார்வையற்ற பேராசிரியர் யூசுப். மற்ற எல்லோரையும்போல தனக்கும் கண் பார்வை வேண்டும். இந்த உலகத்தைப் பார்க்க வேண்டும். தனக்கு பிரியமான மனிதர்களை நோக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்குள் எழுகிறது. ஆனால், பார்வை கிடைத்ததும் அவர் அடையும் மன வேதனைகளையும் ஏமாற்றத்தையும் சித்தரிக்கும் அதி உன்னதமான திரைப்படம் வில்லோ ட்ரீ. டோரண்டோ திரைப்படவிழாவில் விருது பெற்றதுடன் பல உலக விருதுகளை அள்ளியது.







Song of Sparrows (2008) தெஹ்ரைனிலுள்ள தீக்கோழி பண்ணையில் பணிபுரிகிறான் கறீம். வறுமையான குடும்ப சூழ்நிலையில் குழந்தைகளை பாதுகாக்க அவன் படும் அல்லல்கள், தாயன்புக்குச் சற்றும் குறைந்ததல்ல என்று புரிய வைக்கிறது இப்படம். இதில் தந்தையின் அன்பு, பாசம், பிரியம் ஆகியவற்றை அற்புதமாகக் காட்டியிருப்பார் மஜித். பெர்லின் திரைப்படவிழா விருதுடன் இப்படமும் பல விருதுகளை அள்ளியது.


இவை தவிர எண்ணற்ற குறும்படங்களையும் ஆவணபடங்களையும் எடுத்துள்ளார் மஜித் மஜிதி.


2008ல் நடந்த சீன ஒலிம்பிக்ஸ்ஸில் பெய்ஜிங் பற்றிய குறும்படம் தயாரிப்பதற்காக சீன அரசாங்கம் இவருடன் சேர்த்து 5 மிகச்சிறந்த இயக்குநர்களை தேர்வு செய்தது.உலகத்தின் பல விருதுகளை பெற்றதுடன் சென்ற வருடம் Starz Denver சர்வதேச திரைப்படவிழாவில் வாழ் நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். இவரது கலைப்பயணம் தொடர்கிறது.


உலகின் எல்லா இயக்குநர்களுக்கும் எது பிரச்சினையோ, அதுதான் இவருக்கும் இருக்கிறது. ஒரு திரைப்படம் வெற்றியடையுமா? அல்லது தோல்வியடையுமா என்று எவருக்கும் தெரியாது. ஒரு தயாரிப்பாளனை திருப்திபடுத்துவதான் முதல் வேலை என்கிறார் மஜித். இருந்தாலும், பல திரைப்படங்கள் உங்களை மகிழ்வித்து நாற்காலியோடு உட்காரவும் விசிலடிக்கவும் வைக்கிறது. ஆனால், தியேட்டரை விட்டு வெளியேறும்போது ஏமாற்றப்பட்டது மெள்ள மெள்ள தெரிய வரும்.


ஒரு நல்ல படம் வாழ்க்கையில் நெருக்கத்தை ஏற்படுத்தவதாக இருக்க வேணடுமே தவிர பார்வையாளனை ஒரு பிணைக்கைதியாக பிடித்து வைத்திருக்கக் கூடாது. வாழ்வின் உண்மையைக் கண்டடையும் பயணமாக அது தொடங்கவேண்டும். ஒரு திரைப்படம் என்பது கலையாக, அன்பாக, நேசமாக, காதலாக யதார்தத்தின் ஒரு பதிவாக வெளிப்பட்டால் மட்டுமே அது உலக சினிமாவாக போற்றப்படுகிறது.





டிஸ்கி: சூரிய கதிர் (ஜன 16-31) இதழில் வெளியான கட்டுரை.


Pedar { Father }









" இப்பிரபஞ்சத்தின் முடிவில்லா விரிவின் முன், இழந்த தேசத்திற்கான மன்னனின் கவலைக்கும் உடைந்த பொம்மைக்கான குழந்தையின் கண்ணீருக்கும் அதிக வித்தியாசம் இல்லை "

அமெரிக்காவின் மிகப்பெரும் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான மார்க் ட்வைன்.
--------------------------------------------------------
உலக திரைப்பட இலக்கணமும் அறிமுகம் இல்லாத எவரையும் மஜித் மஜிதியின் திரைப்படங்கள் கவர்ந்து விடும் என்பதை சொல்ல தேவையில்லை.

சிறிதும் நாடகத்தன்மை இல்லாது அதிகமான இயல்பும் எளிமையும் குழந்தைகளின் உளவியலை மாறுபட்ட வாழ்வியலை நெகிழ்ச்சியான திரைப்படங்களாக வடிவமைத்தைலையே வழக்கமாக கொண்ட மஜித் மஜீதியின் மற்றொருமோர் உன்னத படைப்பு Pedar.

நாம் எல்லோரும் நம் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் வாழும் இந்த வேளையில் எத்துனையோ பேர் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் இல்லாத அல்லது இழந்து விட்ட தத்தம் உறவுக்காக ஏங்கி கொண்டுதான் இருப்பார்கள்.
அப்படி தந்தையின் பிரிவால் துடிக்கும் ஒரு சிறுவனின் கதை தான் இந்த திரைப்படம்.
---------------------------------------------------------
Pedar { Father }



சிறுவன் மெஹ்ரோலா கடந்த நாலு மாதமாக துறைமுகத்தையொட்டிய மொத்த வியாபார கடையில் கடுமையாக உழைத்து விடுமுறையில் ஊருக்கு கிளம்புகிறான். நாலு மாத சம்பளத்தில் பாதியை மட்டும் கொடுக்கிறான் முதலாளி. மீதியை விடுமுறையில் இருந்து வந்தததும் தருவதாகவும் இல்லாட்டி நீ திரும்பி வரமாட்டாய் என்கிறான்.



முதலாளி மீது கோபம் கொண்டாலும் அதை மறந்து ஊருக்கு போகப்போகும் மகிழ்ச்சியில் மார்கெட்டுகளில் தேடித்தேடி பொருட்களை வாங்குகிறான். எதுவுமே தனக்கில்லை. ஆறுமாத்திற்கு முன் ஒரு விபத்தில் தந்தையையிழந்த அவன் மூன்று தங்கைகளுக்கும் அம்மாவுக்கும் மட்டுமே .


தொலை தூர பயணத்தின் முடிவில் ஊர் சென்றடைகிறான். ஒடையில் முகம் கழுவும் போது அவனது தந்தையுடன் எடுத்த புகைப்படம் ஒடை நீரில் விழுந்து அடித்து செல்கிறது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.




அதையும் மறந்து தாயையும் தங்கைகளையும் காண மகிழ்ச்சியோடு வீட்டை நோக்கி ஒடும் போது வழியில் நண்பன் லத்தீப்பை சந்திக்கிறான்.



அம்மாவும் தங்கைகளும் உன் வீட்டில் இல்லை. அந்த போலீஸ்காரனுக்கும் உங்க அம்மாவிற்கும் கல்யாணமாகிவிட்டது, எல்லோருமே அவர் வீட்டில் தான் வசிக்கிறாங்க என்ற அதிர்ச்சியை மெஹ்ரோலாவால் நம்பவும் முடியவில்லை. தாங்கி கொள்ளவும் இயலவில்லை.


இரண்டு மாதங்களுக்கு முன் அவனது தங்கைக்கு ஏற்பட்ட நோய்க்கு அதிக செலவிட்டதாகவும் அதனாலேயே உங்கம்மாவை அந்த போலிஸ்காரன் கல்யாணம் செய்ததாகவும் ஊரெல்லாம் பேசிக்கிறாங்க என்கிறான் லத்தீப்.


போலீஸ்காரருக்கு சரியான பாடம் புகட்டுகிறேன் என்கிறான் மெஹ்ரோலா.


தாயை பார்த்து கடும் கோபம் கொண்டு அவளை கண்டபடி திட்டுகிறான். ஒரு தந்தையின் பொறுப்போடு பணம் சம்பாதிக்க போன நேரத்தில் தான் ஏமாற்றப்பட்டு போனதாய் வருந்துகிறான்.



ஆனால் தாயோ அவர் மிகவும் நல்லவர். இக்கட்டான நேரத்தில் ஆறுதல் தந்தவர் என்று எவ்வளவு எடுத்து கூறியும் ஆழ்மனத்தில் இருக்கும் தந்தையும் பொறுப்பும் பதின்ம வயதிற்குண்டான கோவமும் முரட்டுதனமும் அவனை எதையும் ஏற்று கொள்ள மறுக்கிறது.



கோவித்து கொண்டு தங்கள் வீட்டிலேயே தனியாக தங்குகிறான். நண்பன் லத்தீப் மூலம் இரவு உணவை கொடுத்தனுப்புகிறாள் தாய்.


கோவம் குறையாதவனாய் மறுநாள் போலீஸ்காரரை சந்த்திது பணத்தை அவர் முகத்தில் விட்டெறிகிறான் மெஹ்ரோலா. அவரோ உன் தாய்க்கு கொடு இந்த பணத்தை எனக்கு வேண்டாம், நான் பணத்திற்காகவும் சுகத்திற்காகவும் எதுவும் செய்யவில்லை. மன அமைதிக்காகவே எதையும் செய்வதாய் கூறுகிறார்.


இள இரத்தம் எதையும் புரிந்து கொள்வாதையில்லை.


தான் சம்பாதித்த பணத்தை கொண்டு தனது வீட்டை அலங்கரித்து மூன்று தங்கைகளையும் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் கூட்டி கொண்டு வந்து விடுகிறான்.


பதறியடித்து ஒடி வருகிறார்கள் தாயும் போலிஸ்காரரும். பயந்து போய் காட்டி கொடுக்கிறான் லத்தீப். குழந்தைகளை அழைத்து சென்று விடுகின்றனர்.


மறு நாள் வீட்டில் மாடிப்படிகளில் விழுந்து அடி பட்டு கடும் காய்ச்சாலால் அவதி படுகிறான் மெஹ்ரோலா. மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஒடுகிறார் போலிஸ்காரர். தன் வீட்டிலேயே தங்க வைத்து அவனை குணப்படுத்த சொல்கிறார். தாயும் அன்போடும் அரவணைப்புடன் அவனை காக்கிறாள்.


ஒரு நாள் இரவு யாருக்கும் தெரியாமல் காவல் பணியின் சின்னமான போலிஸ்காரரின் கைத்துப்பாக்கியை எடுத்து அவரை கொல்ல நினைக்கிறான். அது நடக்காமல் போகவே தன்னையும் அழைத்து கொண்டு போகும் படி கெஞ்சிய நண்பன் லத்தீப்புடன் தான் வேலை செய்யும் நகரத்தை நோக்கி கைத்துப்பாக்கியோடு இரவோடு இரவாக ஒடிப்போகிறார்கள் இருவரும்.


விடிந்ததும் தன் துப்பாக்கியையும் இரண்டு சிறுவர்களையும் காணாத போலிஸ்காரர் எரிச்சலும் ஆத்திரமும் அடைகிறார்.


நாலு நாள் லீவு சொல்லிவிட்டு நகரத்தை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணமாகிறார். அலைந்து திரிந்து கண்டும் பிடித்து விடுகிறார்.
லத்தீப்பை ஊருக்கு அனுப்பிவைத்து விட்டு மெஹ்ரோலா.கை விலங்கிட்டு தனது மோட்டார் சைக்கிளிலேயே அழைத்து வருகிறார்.

இருவருக்கும் பேச எவ்வளவோ இருந்தும் இருவரும் முறைப்பும் வெறுப்பும் கலந்த பார்வை. சில நேரங்களில் இகழ்ச்சி கலந்த புன்னகை. மட்டுமே.

போலிஸ்காரர் ஏமாந்த தருணத்தில் மோட்டார் சைக்கிளோடு தப்பிக்கிறான் மெஹ்ரோலா. பல கைதிகளை வளைத்து பிடித்த தனது தொழில் முறையால் குறுக்கு வழியில் ஒடி மீண்டும் பிடித்தும் விடுகிறார்.


கண்டபடி திரிந்ததாலும் இருவரும் வழியை தவற விட்டு விடுகின்றனர். கொடிய பாலைவன கோடையில் மோட்டார் சைக்கிளும் பழுதடைய கடும் கோவம் கொள்கிறார் போலிஸ்காரர்.



கை விலங்கை அவிழ்த்து விட்டு “ உன் இஷ்டப்படி ஓடு.” வழி தெரியாது எங்கு வேண்டுமானாலும் போ என்கிறார்.

அதுவரை காத்திருந்த மெஹ்ரோலா அவரை விட்டு விலகாமல் அருகிலேயே நடக்கிறான்.


திடீரென பாலைவன்ப்புயல் அடிக்கிறது. சூறாவளியாய் சுற்றும் அந்த புழுதி கலந்த மண்ணில் செய்வதாறியாது திகைக்கின்றனர் இருவரும். நாக்கு வறண்டு தாங்கி கொள்ள முடியாமல் மயங்கி விழுகிறார் போலிஸ்காரர்.


செய்வதறியாது திகைக்கிறான் மெஹ்ரோலா. கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒட்டகங்கள் தெரிகின்றது. ஒட்டகங்கள் திரிந்தால் அவ்விடத்தில் தண்ணீர் இருக்கும் என யூகிக்கிறான். அந்த ஒரு புள்ளியை குறி வைத்து ஒடுகிறான். அவன் யூகம் வீணாகவில்லை. சள சளவென்று ஒடும் ஒரு மெல்லிய நீரோடையை காண்கிறான்.


ஒரு நிமிடமும் தயங்காமல் மீண்டும் ஒடி வந்து போலீஸ்காரரை கைகளை பிடித்து ஒடை வரை இழுத்து வருகிறான். இருவரும் ஒடையில் சரிந்து விழுகின்றனர்.


தண்ணீரின் குளுமை அவனுக்கு இதமாய் இருக்கிறது. தனது தந்தையின் பாதுகாப்பான கரங்களில் வீழ்ந்தது போல் தண்ணீரை பருககூட தோன்றாமல் சில நேரம் வீழ்ந்து கிடக்கிறான்.


அவ்வளவு குளிர்ந்த தண்ணீரில் வீழ்ந்து கிடந்தாலும் சுய உணர்வின்றி கிடக்கும் போலீஸ்காரரின் சட்டைபையிலிருந்து ஒரு புகைப்படம் தண்ணீரில் மிதந்து மெஹ்ரோலா முகத்தில் மோதுகிறது.


தான் தனிமையில் இருக்கும் போது போலிஸ்காரர் பார்த்து புன்னகைக்கும் புகைப்படம்.


மெஹ்ரோலாவின் தாயும் அவளது குழந்தைகளுமான புகைப்படம் அது.

அதை பார்த்ததும் மெஹ்ரோலாவின் கண்கள் ஒளிர்கிறது.

இந்த காட்சியோடு நிறைவடைகிறது திரைப்படம்.
சுட்டெரிக்கும் பாலைவனத்திற்குள்ளும் கடவுள் அளித்த நீரோடையாய் சொல்லணா வேதனையுடன் வாழ்ந்த தாய்க்கு கடவுள் அளித்த ஆதரவாய் போலீஸ்காரர் இருந்த்தை சொல்லாமல் சொல்லி முடித்திருக்கிறார் மஜித் மஜீதி.


ஊரை நோக்கி ஒடும்போது தொலைத்த தனது தந்தையின் புகைப்படைத்தை ஆரம்ப காட்சிகளில் பொறுத்தியிருப்பதை சொல்ல வார்த்தைகளில்லை.


தந்தையின் பொறுப்பு பிள்ளைகளை பெற்று விட்டதால் மட்டும் வந்து விடுவதில்லை என்பதை சிறுவன் மெஹ்ரோலா பாத்திர படைப்பின் மூலம் சித்தரித்திருக்கும் இயக்குனரின் உணர்வும் கற்பனை திறனும் அனைத்து தந்தையர்களுக்கும் இத்திரைப்படம் ஒரு பாடம்.
பார்க்க பார்க்க திகட்டாத அழகான மலைகளும் நீரோடைகளும் குளுமையில் கற்பனைகெட்டாத இடங்களிலெல்லாம் சென்று ஒரு திரைப்படைத்தை படைத்து ஒவ்வொரு காட்சியையும் ஒரு கவிதையாய் சொல்ல முற்படும் மஜித் மஜீதியை எத்தனை பாராட்டினாலும் தகும்.



மெஹ்ரோலா நடித்த சிறுவன் Hassan Sadeghi நடிப்பு மிகுந்த பாராட்டுகுரியது.


1996 ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்ப்டம் உலக பல திரை விழாக்களில் பங்கு பெற்றதுடன் ஒன்பது உலக விருதுகளை அள்ளியது.


நல்ல சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்கக வேண்டிய திரைப்படம்.

Song of Sparrows { Irani Film }













மனித நேயத்தையும் மனித உறவுகளின் நெகிழ்ச்சியான கவித்துவ வாழ்வியலை கொண்டவை ஈரானிய திரைப்பட‌ங்கள்.


உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த மஜித் மஜிதி என் மானசீக இயக்குநர். அற்புத படைப்பாளி. அவருடைய அனைத்து திரைப்படங்களிலும் அடிப்படை அன்பு மட்டுமே. மற்றும் இவரது ஒவ்வொரு திரைபடங்களில் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போல விரிகிறது.


தெஹரைனிலுள்ள தீக்கோழி பண்ணையில் பணிபுரிகிறான் கறீம். வாழ்க்கை பிரச்சனையின்றி போகும்போது, பண்ணையில் இருந்து ஒரு கோழி காணாமல் போனதால் கறீம் வேலையில் இருந்து வெளியேற்றப்படுகிறான்.


இதைத் தொடர்ந்து புதிய வேலையில் சேர முற்படுகிறான். காது கேளாத மகளின் காது கேட்கும் இயந்திரம் வீட்டின் அருகே இருக்கும் ஒரு பாழும் கிணற்றுக்குள் விழுந்து செயலிழக்கிறது. அதை ரிப்பேர் செய்யும் பொருட்டும் புது வேலை தேடவும் நகரத்துக்குச் செல்கிறான். அதன்பிறகு கரீமின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு மாற்றங்களே உணர்வு பூர்வமான படைப்பு.



நகரத்துக்கு போகும் கறீமை மோட்டார் சைக்கிளில் ஆட்களை ஏற்றி செல்பவர் என தவறாக நினைத்து ஏறி கொள்கின்றனர். இதே ஒரு நல்ல வருமானம் வரும் தொழிலாக எண்ணி அதையே தொடர்கிறான் கறீம்.



பொருட்களை ஏற்றி செல்லும் போது ஒரு நாள் ஒரு குளிர் சாதன பெட்டியை உரிய இடத்தில் சேற்க இயலாமல் வீட்டிற்கு கொண்டு வந்து விடுகிறான். புதிதாக வீட்டிற்கு வாங்கி வந்ததாக எண்ணி குடும்பமே மகிழ்ச்சி அடைகிறது. ஆனால் நேர்மை தவறாத கறீம் மறுநாள் அந்த கம்பெனியிலேயே ஒப்படைக்க அங்குள்ள மேலாளர் கறீமின் அளவற்ற நேர்மையை பாராட்டி தொடர்ந்து வேலை தருவாதாக கூறுகிறார். வருமானமும் பெறுகிறது.



நகரத்தில் உடைந்த கட்டிடங்களிலிருந்து வீண் என தூக்கி எறிய வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு பொருட்களை எல்லாம குருவி போல சேகரித்து வீட்டிற்கு உபயோகமானதாகவும் மாற்றவும் செய்கிறான்.



வீட்டின் பாழடைந்த கிணற்றை தூறு எடுத்து அதில் வண்ண மீன்கள் வளர்த்து விற்பனை செய்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கூறும் கறீம் சிறிய மகனும் அதற்காக பெரும் முயற்ச்சி மேற் கொள்கிறான். ஆனால் அந்த எண்ணமும் ஈடேறாமல் வாங்கி வந்த மீன் குட்டிகள் தொட்டி உடைந்து வீணாகின்றன.



திடீரென எதிர் பாரத விபத்தில் கறீமுக்கு கால் எலும்பு முறிந்து விடுகிறது. குடும்ப சூழலையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் எண்ணி சொல்ல முடியாத சோகத்தில் தவிக்கிறான். உறவினர் ஒருவரின் உதவியால் மருத்துவமனை சென்று சிறிது சிறிதாக உடல் நலமும் தேற முற்படுகிறான்.



அளவற்ற சோதனைகளின் முடிவாக காணாமல் போன தீக்கோழி கிடைத்துவிடவே மீண்டும் வேலையில் சேருமாறு செய்தி வர ஆனந்தமடைவது கறீம் மட்டுமல்ல திரைப்படம் பார்க்கும் நாமும் தான்.



ஒரு குடும்பம் வருமானம் ஈட்டவும் அதற்கு ஒவ்வொருவரும் நேர்மையுடனும் உற்சாகத்துடனும் செய்யும் முயற்ச்சியும் திரைப்படம் பார்ப்வர்க்ளையும் பற்றி கொள்ளும் விதத்தில் படமாக்கியுள்ள மஜித் மஜிதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்விய்லை இப்படியெல்லாம் திரைப்படமாக்க இயலுமா என எண்ணி வியந்து போனேன்.



காது கேளாத மகளுக்கு ஒரு இயந்திரம் வாங்க தந்தை படும் பாடுகளும் தந்தை நிலை அறிந்து மகள் காது கேட்பது போல பாவனை செய்வதும் திரைப்படத்தை பார்பவர்களின் கண்களில் கண்ணீரை வர வைக்கும். அது வார்த்தைகளில் அடங்காத காட்சிகள்.



அத்துணை சோகத்திலும் சொல்ல முடியாத வேதனையிலும் கறீம் தன் மனையின் மீது காட்டும் அளவற்ற காதலுடனும் குழந்தைகள் மீது தீராத அன்புடனும் நேர்மையுடன் வாழ்வது அவ்வளவு இயல்பு.



தாயாகித் தந்தையுமாய் தாங்குபவன் என்றும், தாயுமானவன் என்றும், இப்படி எல்லா இடத்திலும் தாயை முன்வைத்துத் தகப்பனைச் சொன்னாலும் - தாயன்புக்குச் சற்றும் குறைந்ததல்ல, தந்தையின் அன்பு, பாசம், பிரியம். ஒரு தகப்பனின் பாசத்தை விளக்கும் வண்ணம் அன்று "காவல்காரன்' படத்தில்
காலத்தை வென்ற நம் அருமை கவியரசர் கண்ணதாசன்:


"குழந்தை பாரம் உனக்கல்லவோ...

குடும்ப பாரம் எனக்கல்லவோ...

கொடியிடையின் பாரம் எல்லாம்பத்து மாதக்கணக்கல்லவோ...

மனைவியையும் குழந்தையையும்
ஒருவனாகச் சுமக்கின்றேன்
சுமப்பதுதான் சுகம் என்று மனதுக்குள்ளே ரசிக்கின்றேன்


என்ற வரிகளை எல்லாத் தந்தையர்களும் முற்றாக ஆமோதிப்பார்கள்.


எத்துணை உண்மையான வரிகள் என்பதிற்கு சிறுகதைக்கு‌ரிய கச்சிதத்தையும், கவிதைக்கு‌ரிய கவித்துவத்தையும் ம‌ஜித் ம‌ஜிதியின் இத்திரைப்படம் ஒரு இலக்கணம்.


உலக அரங்கில் பல்வேறு பாராட்டுதல்களைப் பெற்றதுடன் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் & இயக்கம் என பல விருதுகளையும் வாரி குவித்துள்ளது.



கறீமாக நடித்த Mohammad Amir Naji க்கு பல விருதுகளை பெற்று தந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த கோவா திரைப்பட விழாவில் இறுதி நாளில் திரையிடப்பட்டு கெளரவப்படுத்தப்பட்டது. அத்துடன், ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதும் மற்றொரு சிறப்பு.



சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.
Please don't miss.



நாடு : ஈரான்

வெளியான ஆண்டு : 2008

இயக்குனர் : மஜித் மஜிதி

நேர அளவு : 96 நிமிடம்

மனித நேய இயக்குநர் Majid Majidi









உலக திரைப்பட வரலாற்றில் தனக்கென தனி இடத்தை பிடித்தவரும் வாழ்க்கையின் மெல்லிய தருணங்களை யதார்த்த்மாக காட்டக்கூடிய மிகச்சிறந்த இயக்குநர்கள் வரிசையில் என்னுடைய முதலிடம் இவருக்குதான்.

1959 {ஏப் 17 } ல் இரானில் பிறந்து வறுமையில் வாடி 12 வயதில் தெருதெருவாக இனிப்பு மற்றும் ஜஸ் விற்று பள்ளி படிப்பை மேற்கொள்ள முடியாமல் டெஹ்ரானில் உள்ள நாடக கல்லூரியில் படித்தார்.

1978- 79 ல் இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டு சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார். என்றாலும் இயக்குநராக வேண்டும் என்பதே இவரது பேரார்வம்.

1992 ல் தனது முதல் திரைப்ப்டத்தை இயக்கினார்.

1998ல் இவர் இயக்கிய Children of Heaven ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இரானிய படம். பல்வேறு உலக திரைப்பட அரங்கில் விருதுகளை வாரிக்குவித்த படம்.

கோவிலிலோ கல்யாண மண்டபத்திலோ தவறவிட்டு விடுவோமோ என நினைக்கும் "காலணி" தான் திரைப்படத்தின் "கதாநாயகன்" அனைவரும் பார்க்கவேண்டிய படம்.

2008ல் நடந்த சீன ஒலிம்பிக்ஸ்ஸில் பெய்ஜிங் பற்றிய குறும்படம் தயாரிப்பதற்காக சீன அரசாங்கம் இவருடன் சேர்த்து 5 மிகச்சிறந்த இயக்குநர்களை தேர்வு செய்தது.

இவரது மிகச்சிறந்த சில படங்கள்:
Baduk (1992)
God Will Come (1995)
Father (1996)
The Colour of Paradise (1999)
Baran (Rain) (2001)
Weeping Willow (2005)
Song of Sparrows ( 2008 ) இத்திரைப்ப்டத்தை பற்றிய பதிவு இங்கே
வர இருப்பது: Kashmiri A Float (2008)



இவரது வலைத்தளம்:
http://www.cinemajidi.com






 

©2009 butterfly Surya | by TNB